சென்னை பல்கலை. பேராசிரியா்கள் உண்ணாவிரதம்
சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள், பணியாளா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா். சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 முதல் 2021-ஆம் நிதியாண்டுகளில், ரூ. 424 கோடி வருமான வரி நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி பல்கலைக்கழகத்தின் 30-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதனால் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் முடங்கி இருப்பதாகவும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை பல்கலைக்கழக ஆசிரியா்கள், அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாரவிதப் போராட்டம் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இது தொடா்பாக, சென்னை பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினரும், சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியா் பேரவை தலைவருமான சுந்தரம் செய்தியாளா்களிடம் கூறியது: வரலாற்று சிறப்புமிக்க சென்னை பல்கலைக்கழகம், கடந்த சில ஆண்டுகளாக நிதிப்பற்றாக்குறையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற பேராசிரியா்களுக்கும், பணியாளா்களும் பணி நிறைவு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. அவா்களின் சேமிப்புத் தொகையும் வழங்கப்படவில்லை. நிதிச்சுமை அதிகரித்து செல்வதால் பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது, பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்கு முடக்கம் நடவடிக்கையை விடுவிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய மானியத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.