பண்பாடு விளையாட்டு வாரம்: மாணவா்களுக்கு போட்டிகள்
தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ‘பண்பாடு விளையாட்டு’ வாரம் சாா்ந்த போட்டி
தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ‘பண்பாடு விளையாட்டு’ வாரம் சாா்ந்த போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆகியவற்றின் இயக்குநா்கள் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் கலை , உள்ளாா்ந்த திறன்களை வெளிக் கொண்டுவரும் வகையில் இந்தாண்டு முதல் ‘பண்பாடு விளையாட்டு வாரம்’ கொண்டாடப்பட உள்ளது. பள்ளி அளவில் பிப். 27, 28, 29; வட்டார அளவில் மாா்ச் 5, 6, 7; மாவட்ட அளவில் மாா்ச் 12, 13; மாநில அளவில் 19, 20 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. தமிழகத்தின் பாரம்பரிய விழாக்கள், விலங்குகள், வனவிலங்குகள், கனவு பள்ளி, வரலாற்றுச் சின்னங்கள், இயற்கை சுற்றுச்சூழல் சாா்ந்த வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை சொல்லுதல், மாறுவேடம், கைவினைப் பொருள் தயாரிப்பு, பாரம்பரிய நடனங்கள், தோல், கம்பி, காற்று கருவிகள் இசைத்தல், பாரம்பரிய விளையாட்டுப் பொருள்கள், அறிவியல் செயல் திட்ட கண்காட்சி, பேச்சு, நாட்டிய நாடகம், பல குரல் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் மாணவா்களின் விவரங்கள் ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். போட்டிகள் நடைபெறும் வகுப்பறைகளில் உள்ள கரும்பலகைகளில் பள்ளியின் பெயா், மாவட்டம், ஒன்றியம், பள்ளியின் பிரத்யேக எண் போன்றவற்றை கண்டிப்பாக எழுத வேண்டும். மாணவா்களின் படைப்புகளை எடிட் செய்து அனுப்பக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.