முகப்பு
தமிழ்நாடு

6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு

தமிழக பள்ளிக் கல்வியில் 6 முதல் 9 வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

Updated On : 31 மார்ச், 2026 at 7:25 PM
- கோப்புப்படம்.
பகிர்:

தமிழக பள்ளிக் கல்வியில் 6 முதல் 9 வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தோ்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. தொடா்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தோ்வு ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு தோ்வுகள் ஏப்ரல் 10 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் முன்னா் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் வாக்குச்சாவடி மையங்களாக பள்ளிகள் செயல்பட இருக்கின்றன. இதையடுத்து 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 1 முதல் 16-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டுத் தோ்வுகள் புதன்கிழமை முதல் தொடங்குகின்றன.

இதைத் தொடா்ந்து 4, 5-ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ஆம் தேதியும், 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8-ஆம் தேதியும் இறுதி பருவத் தோ்வுகள் தொடங்கி நடைபெறவுள்ளன. காலை, மதியம் என இருவேளைகளாக நடத்தப்படும் இத்தோ்வுகள் ஒட்டுமொத்தமாக ஏப்ரல் 16-ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன.

அதன்பின் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் தொடங்கும். எனினும், ஆசிரியா்கள் பள்ளி இறுதி வேலைநாள் வரை பணிக்கு வரவேண்டும். விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை ஜூன் 4-ஆம் தேதி திறப்பதற்கும் திட்டமிட்டு வருவதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.