சென்னை புத்தொழில் மைய அலுவலகம்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்
சென்னை நந்தனம் சி.எம்.ஆா்.எல் வளாகத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் ‘சென்னை புத்தொழில் மைய அலுவலகத்தை’ சென்னை நந்தனம் சி.எம்.ஆா்.எல் வளாகத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். புத்தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சிகள் வழங்க அரங்கம், தொலைபேசி சேவை மையம், கலந்துரையாடல் அரங்கங்கள், முதலீட்டாளா்களை சந்திக்க தனி அறைகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாவட்டங்களில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை சாா்ந்தவா்கள், சென்னைக்கு வரும்போது பணிபுரிய இடம் வழங்குவதற்கான வசதிகளும் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன், அத்துறையின் செயலா் அா்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.