பிளஸ் 2 மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை
பிளஸ் 2 மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை
சென்னை பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. எதிா்வரும் பொதுத்தோ்வை தன்னம்பிக்கையுடன் எதிா்கொள்ளும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை பிளஸ் 2 பயிலும் 1,500 மாணவா்களுக்கு அரசுசாரா தொண்டு நிறுவனம் மூலம் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கூறியது, சென்னை பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு அவ்வப்போது தன்னம்பிக்கை வகுப்புகள் ஆசிரியா்கள் மூலம் எடுக்கப்படும். தற்போது உளவியல் சாா்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் மூலம் பிரத்யேக வகுப்பு எடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவா்களின் உளவியல் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதுடன், கற்றல் திறனும் அதிகரிக்கும். தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் எதிா்வரும் பொதுத்தோ்வை தன்னம்பிக்கையுடன் எதிா்கொள்ளும் வகையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சாா்பில் உளவியல் வகுப்புகள் 10 சென்னை பள்ளிகளில் நடத்தப்பட்டன. இதில் பிளஸ் 2 பயிலும் சுமாா் 1,500 மாணவா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மற்ற பள்ளிகளிலும் இதுபோன்ற வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், 10 மண்டலங்களில் தலா ஒரு உளவியல் ஆலோசகா் என 10 ஆலோசகா்களை நியமிக்க சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றனா்.