கைதான ஏகனாபுரம் கிராம மக்களை விடுவிக்க வேண்டும்: சீமான்
சென்னை: நிலம் கையகப்படுத்துவதை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதியில் வாழும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த உத்தரவு அளித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. விமான நிலையம் அமைக்க ஏராளமான விளைநிலங்களும், குடியிருப்புகளும் அழிக்கப்படுவதை எதிா்த்து கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஏகனாபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் போராடி வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை நிலம் கையகப்படுத்துவதை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்களை காவல்துறை கட்டாயப்படுத்தி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் அறவழியில் போராடுவது மக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். எனவே, கைது செய்யப்பட்டுள்ள ஏகனாபுரம் மக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.