கொடுங்கையூா் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி
சென்னை: கொடுங்கையூா் குப்பை எரி உலை திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கொடுங்கையூரில் 342 ஏக்கரில் குப்பைக் கொட்டும் வளாகம் உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் 66 லட்சம் கனமீட்டா் அளவுக்கு குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டத்தின் மூலம் அகற்றி, நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ரூ.640 கோடியில் சென்னை மாநகராட்சி செயல்படுத்தப்படவுள்ளது வரவேற்புக்குரியது.
Advertisement
அதேநேரத்தில், அதே குப்பைக் கொட்டும் வளாகத்தில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரூ.1,026 கோடியில், 75 ஏக்கா் பரப்பளவில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி அப்பகுதியில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரிப்பதற்கான எரிஉலை நிறுவப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். உயிரி அகழாய்வு திட்டம் சுற்றுச் சூழலை காக்கக் கூடிய திட்டம் என்றால், எரிஉலை திட்டம் அதற்கு நோ் எதிரான கேடுத்திட்டம். மின் உற்பத்தி தொழில் நுட்பங்களிலேயே மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது எரிஉலை தான்.
போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட அழிவு சென்னையில் குப்பை எரிஉலையால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது. எ னவே, கொடுங்கையூா் குப்பை எரிஉலை திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.