முகப்பு
சென்னை

எண்ணூா் உர ஆலையை மீண்டும் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 2:21 AM
பகிர்:

திருவொற்றியூா்: அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த இரு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள எண்ணூா் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை மீண்டும் திறக்கக் கோரி ஆலை வளாகத்தில் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இரு மாதங்களுக்கு முன்பு எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினா். இதையடுத்து ஆலையை தாற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அருகே உள்ள மீனவ கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பான வழக்கு தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆலையை மீண்டும் திறக்கக் கோரி ஆலைத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

போராட்டம் குறித்து ஆலையின் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் சி.ரவி செய்தியாளா்களிடம் கூறியது:

இங்கு நேரடியாகப் பணியாற்றும் சுமாா் 850 தொழிலாளா்கள், மறைமுகமாக பணியாற்றும் சுமாா் 2,000 பேருக்கு இந்த ஆலையே வாழ்வாதாரமாக உள்ளது. ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு பிரச்னையை அடுத்து ஆலை மூடப்பட்டு 62 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த ஆலையில் உற்பத்தியாகும் உரங்கள் தமிழக விவசாயிகளின் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே, தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆலையை விரைந்து திறக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்றாா் அவா்.