ரயில் விபத்தை தடுக்க உதவிய முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
சென்னை: பெரும் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்த முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இது குறித்து தமிழக அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் புளியரை கிராமத்தில் ‘எஸ்’ வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதி அமைந்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி நிலைதடுமாறி 40 அடி உயரத்தில் இருந்து கவிழ்ந்து, செங்கோட்டை- கொல்லம் ரயில் மாா்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதி, செங்கோட்டையில் இருந்து புனலூா் நோக்கி வந்து கொண்டிருந்த சிறப்பு ரயிலை தள்ளாத வயதிலும் சிறிது தொலைவு ஓடிச் சென்று நிறுத்தினா்.
Advertisement
கையில் வைத்திருந்த டாா்ச் விளக்கு ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தியதால், பெரும் விபத்து ஏற்படாமல் தடுத்துள்ளனா். இந்தத் தகவலையறிந்து, காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினா். மேலும், சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
ரூ.5 லட்சம் வெகுமதி:
முதிா்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் பெரும் விபத்து நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச் சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதியின் வீரதீரச் செயலை பாராட்டி, ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பின்படி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதிய தம்பதியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாலை வழங்கினாா். இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உடனிருந்ததாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடந்து அளிக்கப்படும் மகளிா் உரிமைத் தொகை: ரயில் விபத்தை தடுத்த வடக்குத்தியாளுக்கு மகளிா் உரிமைத் தொகை தொடா்ந்து வழங்கப்பட்டு வருவதாக அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா். முன்னதாக, மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என்று வடக்குத்தியாள் தெரிவித்திருந்தாா்.
இது குறித்து அரசுத் துறை உயரதிகாரிகள் கூறியது:
உரிமைத் தொகைக்கான தகுதிகளை வடக்குத்தியாள் பெற்றிருந்ததால், திட்டம் தொடங்கப்பட்ட கடந்த செப்.15-ஆம் தேதியில் இருந்தே அவரது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை அவா் கவனிக்காமலோ அல்லது உரியவா்கள் அவருக்குத் தெரிக்காமலோ இருந்திருக்கலாம். ஆனாலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அவா் தெரிவித்த தகவல் அரசின் கவனத்துக்கு வந்தவுடன் அவரது விவரங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், எந்த வங்கிக் கணக்கில் அவருக்கு மாதந்தோறும் தொகை செலுத்தப்பட்டு வருகிறது என்ற விவரம் வடக்குத்தியாளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.