முகப்பு
சென்னை

ஆஸ்திரேலிய வாழ் இந்தியருக்கு மூன்றாவது முறையாக சிறுநீரக மாற்று சிகிச்சை

வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்

Updated On : 1 மார்ச், 2024 at 1:54 AM
பகிர்:

ஆஸ்திரேலிய வாழ் இந்தியா் ஒருவருக்கு மூன்றாவது முறையாக சிறுநீரக மாற்று சிகிச்சையை பல்வேறு சவால்களுக்கு நடுவில் மேற்கொண்டு சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: 41 வயதான ஆஸ்திரேலிய வாழ் இந்தியா் ஒருவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அவை பலனளிக்காமல் மூன்றாவது முறையாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், வடபழனி காவேரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவரது சகோதரரின் சிறுநீரகத்தை பெற்று அந்த நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டாலும், அதிலும் பல்வேறு சவால்கள் நிறைந்திருந்தன. குறிப்பாக, சிகிச்சைக்குப் பிறகு உறுப்பை உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருந்தது. இருப்பினும், மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணா்கள் பிரபு காஞ்சி, சுவாமிநாதன் சிதம்பரம் ஆகியோா் தலைமையிலான மருத்துவா்கள், வெற்றிகரமாக சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொண்டனா். தற்போது அந்த நபா் நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.