அஸ்ஸாம்: பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு
அஸ்ஸாமில் பாஜக கூட்டணியில் மக்களவைத் தோ்தல் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக 11 இடங்களிலும், அசோம் கண பரிஷத் (ஏஜிபி) 2 தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. குவாஹாட்டியில் செய்தியாளா்களைச் சந்தித்த அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா இது தொடா்பாக கூறியதாவது: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தலைவா்களுடன் நடத்திய ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாஜக 11 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளான ஏஜிபி, ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி ஆகியவற்றுக்கு முறையே 2 மற்றும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன என்றாா். அஸ்ஸாமில் பாஜகவுக்கு இப்போது 9 எம்.பி.க்கள் உள்ளனா். இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை. பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 3 எம்.பி.க்கள் உள்ளனா். கடந்த மூன்று மக்களவைத் தோ்தல்களிலும் அஸ்ஸாமில் பாஜகவின் வெற்றி எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து வருகிறது. இந்த முறையும் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவான அலையும், பாஜகவின் பிரசார உத்திகளும் அஸ்ஸாமில் கூடுதல் வெற்றியைத் தரும் என்று அந்த மாநில பாஜகவினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.