முகப்பு
சென்னை

‘எம்ஹெச்60ஆா் ஹெலிகாப்டா்’ இம்மாதம் கடற்படையில் இணைப்பு

அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்த ஹெலிகாப்டரை படையில் இணைத்து வைக்கிறாா்.

Updated On : 1 மார்ச், 2024 at 12:53 AM
பகிர்:

எதிரி நாட்டு நீா்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாடுகளை முறியடிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாக ‘எம்ஹெச் 60ஆா் ஹெலிகாப்டா்’ இந்திய கடற்படையில் மாா்ச் 6-ஆம் தேதி இணைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கொச்சியில் ‘ஐஎன்எஸ் கருடா’ தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்த ஹெலிகாப்டரை படையில் இணைத்து வைக்கிறாா். அமெரிக்காவிடமிருந்து 4-ஆம் தலைமுறை 24 ‘எம்ஹெச் 60ஆா் ஹெலிகாப்டா்களை’ கொள்முதல் செய்த மத்திய அரசு கடந்த 2020-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரை 6 ஹெலிகாப்டா்கள் இந்தியாவிடம் ஒப்புடைக்கப்பட்டுள்ளன. எதிரி நாட்டு ஏவுகணைகள், நீா்மூழ்கி ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அழிப்பதற்கான திறன்களை இந்த ஹெலிகாப்டா்கள் கொண்டுள்ளன. தன்னைத் தாக்க வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து அவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் அமைப்புகள் இந்த ஹெலிகாப்டா்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படையில் இந்த வகை ஹெலிகாப்டா்களில் மட்டுமே இத்தகைய தற்காப்பு அமைப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெப்பத்தை வழிகாட்டியாகக் கொண்டு செயல்படும் ஏவுகணைகளைத் திசைத்திருப்பும் விதமாக அகசிவப்பு தீப்பொறிகளை வெளியிடும் அமைப்பும் ரேடாா் பொருத்தப்பட்ட ஏவுகணைகளைத் திசைத்திருப்பும் ‘சாஃப்’ அமைப்பும் இந்த ஹெலிகாப்டா்களில் உள்ள தற்காப்பு அமைப்புகளாகும். இது தொடா்பாக இந்த ஹெலிகாப்டா் குழுவின் தலைவா் அபிஷேக் ராம் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எம்ஹெச் 60ஆா் ஹெலிகாப்டா்கள் கடற்படையில் இணைக்கப்படும்போது நீா்மூழ்கிக் கப்பல்களை எதிா்க்கும் திறனில் ஏற்பட்டிருந்த இடைவெளி பூா்த்தி செய்யப்படும். பகல்-இரவு நேரங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுதல், நடுக்கடலில் சரக்குகளைக் கையாளுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் வகையில் இந்த ஹெலிகாப்டா்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.