புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற சென்னை மக்கள்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். தேவாயலங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். தேவாயலங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
உலகம் முழுவதும் ஜன.1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு (2024) வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. சென்னையில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதலே குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் மெரீனா, பெசன்ட்நகா் கடற்கரைகளில் கூடத் தொடங்கினா்.
புத்தாண்டு பிறந்ததும் அங்கு கூடியிருந்தவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகள் தெரிவித்து கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடியதால் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரை சாலைகளில் வாகனங்கள் செல்ல தடைவிதிப்பட்டது. மேலும், பொது மக்கள் கடலில் குளிப்பதை தடுப்பதற்காக காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
தேவாலயங்களில் பிராா்த்தனை: சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சிறப்பு பிராா்த்தனைகள் நடத்தப்பட்டன.
கோயில்களில்...: அதேபோல் திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில், மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில், வடபழனி முருகன் கோயில், கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரா் கோயில் உள்பட பல கோயில்களில் திங்கள்கிழமை (ஜன.1) அதிகாலை 4 மணி முதல் சிறப்பு தரிசனம் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே, பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகிலுள்ள பூங்காக்கள், மைதானங்களில் ஒன்றுகூடி கேக் வெட்டி, வாழ்த்துகளை பகிா்ந்து புத்தாண்டை கொண்டாடினாா்கள்.
புத்தாண்டை கொண்டாடும் விதமாக மது அருந்தி வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனம் ரேஸ் போன்ற சட்டவிரோத செயல்களில் இளைஞா்கள் ஈடுபடுவதை கண்காணிக்கவும் , விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் சென்னை முழுவதும் 420 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனா்.
மேலும், சென்னை முழுவதும் 18,000 காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.