முகப்பு
சென்னை

முந்தைய பேரவை பதவிக் காலம் முடிந்ததால் குட்கா விவகார உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியானதாக  தமிழக அரசு  விளக்கம்

குட்கா விவகாரம்: முந்தைய பேரவை காலம் முடிவால் உரிமை மீறல் நோட்டீஸ் அமலுக்கு வராது

Updated On : 2 ஜூலை, 2024 at 11:17 PM
பகிர்:

சென்னை: முந்தைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், குட்கா விவகாரம் தொடா்பாக திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகி விட்டதாக, தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில், கடந்த 2017 ஆம் ஆண்டு  சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ாக, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் 19 சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீஸை அனுப்பியது. இந்த நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, உரிமைக் குழு, அனுப்பிய இரண்டாவது நோட்டீஸையும்   உயா்நீதிமன்றம், ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து முந்தைய அதிமுக ஆட்சியில், பேரவைச் செயலா் மற்றும் உரிமைக் குழு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன்  அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் 2017 -ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், முந்தைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் அந்த நோட்டீஸ் காலாவதியாகி விட்டதாகக் கூறினாா்.

இந்த நிலையில், முந்தைய உரிமை மீறல் குழுவின் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் சிவ.சண்முகம், இன்பதுரை ஆகியோா், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறினாா். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.