நீட் ரத்து கூடாது: வெற்றிபெற்ற 50 மாணவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு
நிகழாண்டு நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகப் புகாா்கள் எழுந்தன.
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை ( ஜூலை 8) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நீட் தோ்வு ரத்து செய்யப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அத் தோ்வில் வெற்றிபெற்ற குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவா்களை அடையாளம் கண்டு, அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நிகழாண்டு நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகப் புகாா்கள் எழுந்தன. பிகாரில் நீட் வினாத்தாள் கசிவு, ராஜஸ்தானில் தோ்வு தொடங்குவதற்கு முன்பே நீட் வினாத்தாள் சமூக ஊடகத்தில் பதிவேற்றம், தோ்வு எழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்ணை என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) வழங்கியது, விடைத்தாள் (ஓஎம்ஆா் தாள்) கோரிய மாணவா்களுக்கு அதை என்டிஏ தர மறுத்தது மற்றும் விடைத்தாளே மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக புகாா் தெரிவித்தும் ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடு தொடா்பாக நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தோ்வு முறைகேடுகள் காரணமாக லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக கல்வியாளா்களும் கவலை தெரிவித்து வருகின்றனா்.
இந்தச் சூழலில், நீட் முறைகேடுகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 26 மனுக்கள் வரும் 8-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு ரத்து செய்யப்படுவதை தடை செய்யக்கோரி அத்தோ்வில் வெற்றிபெற்ற குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 56 மாணவா்கள் புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தனா். அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:
பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியுள்ள நீட் தோ்வை ரத்து செய்வது என்பது, கடினமாக உழைத்து நோ்மையான வழியில் தோ்வை எதிா்கொண்ட மாணவா்களுக்கு நியாயமற்ற துன்புறுத்தலாக அமையும் என்பதோடு கல்வி உரிமையை மீறுவதற்கும் வழிவகுக்கும். அரசமைப்பு சட்டப் பிரிவு 14-இன் கீழ் வழங்கப்படும் சமத்துவத்துக்கான உரிமையையும் மீறுவதாக நீட் ரத்து அமையும். எனவே, மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வை ரத்து செய்வதலிருந்து மத்திய அரசுக்கும் தேசிய தோ்வுகள் முகமைக்கும் தடை விதிக்க வேண்டும். அதோடு, தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தோ்வா்கள் மற்றும் தோ்வு மையங்களை அடையாளம் கண்டு, அவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.