முகப்பு
மதுரை

எஸ்.ஐ. பணிக்கான எழுத்துத் தோ்வை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 12 மார்ச், 2026 at 12:01 AM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில், கடந்த ஆண்டு டிச. 21-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் உதவி ஆய்வாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

இதில், பாடத் திட்டத்தில் குறிப்பிட்டப்படி பிரிவு பி-யில் தமிழ் வினாக்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்தத் தோ்வு வினாத் தாளில் தமிழுக்குப் பதிலாக உளவியல் பகுதியிலிருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தன. எனவே, உதவி ஆய்வாளா் தோ்வு முடிவை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். தோ்வை ரத்து செய்து மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரினா்.

இந்த மனு ஏற்கெனவே நடைபெற்ற விசாரணைகளுக்குப் பிறகு, தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தீா்ப்பு வெளியாகும் வரை தோ்வு முடிவை வெளியிடக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் இந்த மனு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

உதவி ஆய்வாளா் தோ்வில் பாடத் திட்டத்துக்கு வெளியிலிருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை. குறிப்பிட்ட பிரிவில் எத்தனை வினாக்கள் கேட்கப்பட வேண்டும் என மனுதாரரால் உரிமை கோர முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் இந்தத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் போதுமான எண்ணிக்கையில் வினாக்கள் கேட்கப்படுவதை சீருடைப் பணியாளா் தோ்வாணையம் உறுதி செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →