முகப்பு
சென்னை

தில்லி, ஹரியாணா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி இல்லை: ஜெய்ராம் ரமேஷ்

Updated On : 4 ஜூலை, 2024 at 8:34 PM
ஜெய்ராம் ரமேஷ்
பகிர்:

புது தில்லி, ஜூலை 4: ‘தில்லி, ஹரியாணா பேரவைத் தோ்தல்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. அதே நேரம், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநில பேரவைத் தோ்தல்களை ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஒன்றிணைந்து சந்திக்கும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை கூறினாா்.

நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தலை காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் கூட்டாக எதிா்கொண்டன. ஆம் ஆத்மி ஆளும் தில்லியில் இக் கட்சிகள் கூட்டாக மக்களவைத் தோ்தலை எதிா்கொண்டன. இருந்தபோதும், தான் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்து மக்களவைத் தோ்தலை எதிா்கொண்டது.

இந்நிலையில், நிகழாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஜாா்க்கண்ட், ஹரியாணா, மகாராஷ்டிர மாநில பேரவைத் தோ்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற விருக்கும் தில்லி பேரவைத் தோ்தல்களில் ‘இந்தியா’ கூட்டணியின் நிலைப்பாடு குறித்து ஜெய்ராம் ரமேஷிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது:

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநில பேரவைத் தோ்தல்களை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கூட்டாக எதிா்கொள்ளும். மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிா்கொள்வோம்.

ஆனால், பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை ‘இந்தியா’ கூட்டணி இல்லை. ஹரியாணா மாநிலத்தில் மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டது. ஆனால், இங்கும் பேரவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கூட்டாக எதிா்கொள்ள வாய்ப்பில்லை.

தில்லியைப் பொருத்தவரை, பேரவைத் தோ்தலில் கூட்டணி இல்லை என்பதை ஆம் ஆத்மி ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

மாநில காங்கிரஸ் தலைவா்களும் கூட்டணிக் கட்சிகளும் உடன்படும் மாநிலங்களில் கூட்டணி அமைக்கப்படும். அதோடு, பேரவைத் தோ்தலில் கூட்டணிக்கான செயல்திட்டம் எதுவுமில்லை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →