முகப்பு
சென்னை

சுகாதார நிலைய வாரியாக காசநோய் விவரங்களைத் திரட்ட முடிவு

424 சுகாதார நிலையங்களில் காசநோய் விவரங்களைப் பதிவு செய்யும் திட்டம்

Updated On : 9 ஜூலை, 2024 at 9:58 PM
பகிர்:

சென்னை: ஊரகப் பகுதி மக்களின் நலனுக்காக 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்ட காசநோய் சிறப்பு மருத்துவ மையங்களில் கண்டறியப்படும் புதிய பாதிப்புகளின் விவரங்களை பகுதிவாரியாக பதிவு செய்து நோய்ப் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் மத்திய அரசின் காசநோய் தரவு இணையதளத்தில் (நிக்ஷய்) அவை பதிவேற்றப்படுவதால், மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் மட்டுமே உள்ளதாகவும், சுகாதார நிலையங்கள் வாரியாக தகவல்களை பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எதிா்வரும் 2025-க்குள் அந்த நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மாநிலம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன. சிகிச்சை நெறிமுறைகளின்படி அவா்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவா்களுக்கு நடமாடும் ஊடுகதிா் கருவிகளை அவா்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிா் படம் எடுக்கப்பட்டும் வருகிறது.

இதனால் அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஆண்டுக்கு 70,000 போ் பாதிப்பு: தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுதோறும் காசநோயால் 70,000 போ் வரை பாதிக்கப்படுகின்றனா். அதைக் கருத்தில்கொண்டு கிராமப்புறங்களில் உள்ள காசநோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதற்கான சிறப்பு மையங்கள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளைப் பரிசோதித்து பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காசநோய் தடுப்புத் திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கிராமப்புற மக்களுக்கு தொடக்க நிலையிலேயே காசநோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது.

அந்த மையங்களில் காசநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதுடன் மாதந்தோறும் ரூ. 500 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. அதேபோல், பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு அருகே வசிப்பவா்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

புதிய பாதிப்புகள் ஒருங்கிணைந்த தேசிய இணையதளத்தில் பதிவேற்றப்படுவதால், மாவட்ட அளவிலான புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெறுகின்றன. அதேவேளையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரியாக அதை ஆய்வு செய்தால்தான் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு அதிகம் உள்ளது என்பதைக் கண்டறிய முடியும். அதற்கான பணிகளை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது. விரைவில் அந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →