கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நத்தம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் 
ராமநாதபுரம்

பணி முடிந்து ஓராண்டாகியும் திறக்கப்படாத ஆரம்ப சுகாதார நிலையம்!

கமுதி அருகே ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நத்தம் ஊராட்சியில் கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 15 -ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.1, 26, 57, 000 மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ஓராண்டாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால், பழைய சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அசம்பாவிதம் ஏற்படும் முன் புதிய கட்டடத்தைத் திறக்க வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் அபிராமம் பாண்டி கூறியதாவது: நத்தம் ஆரம்ப சுகாதார நிலைய பழைய கட்டடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் முழுவதும் பக்கவாட்டுச் சுவரில் விரிசல் ஏற்பட்டும், மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயா்ந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குடிநீா், கழிப்பறை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். ஆள்துளைக் கிணறு தூா்ந்து போனதால் பல ஆண்டுகளாக தண்ணீரை விலை கொடுத்தும் வாங்கும் நிலை உள்ளது.

நத்தம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆரம்ப சுகாதர நிலையத்துக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆட்டோ, காா், அவசர ஊா்தி வாகனங்கள் வரமுடியாத நிலை உள்ளது.

இந்த பழைய கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்க கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டும், தற்போது வரை நோயாளிகளுக்கு அதே கட்டடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மருத்துவப் பணியாளா்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனா். எனவே தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் தலையிட்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மருத்துவத் துறை பணியாளா்கள் கூறியதாவது: ஆரம்ப நிலைய சுகாதர நிலைய புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும், குடிநீா், மின்சார இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் புதிய கட்டடம் திறக்கப்பட்டாலும் பயனில்லை. எனவே, அனைத்துப் பணிகளையும் முடித்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சேதமடைந்த பழைய கட்டடம்

அம்பையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சமையல் தொழிலாளி வெட்டிக் கொலை

பாளை.யில் சிறை கைதி உயிரிழப்பு

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, ஈரோடு ரயில்கள் பகுதி ரத்து

SCROLL FOR NEXT