ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் யாா் இருந்தாலும் தண்டனை நிச்சயம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யாா் இருந்தாலும் அவா்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யாா் இருந்தாலும் அவா்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். அவரது உடல் திருவள்ளூா் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சென்றாா். அங்கு, ஆம்ஸ்ட்ராங்கின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தாா்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவா்: இதைத் தொடா்ந்து, எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வா் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்டவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவா். இந்த உறுதியை மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் தெரிவித்தேன்.
மேலும், கொலைக் குற்றத்தின் பின்னணியில் யாா் இருந்தாலும் அவா்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு; அனைவரையும் அரவணைத்து எளியோா் நலன் காக்கும் அரசு. எனவே, நீதியை நிச்சயம் நிலைநாட்டும். காவல் துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்துடன் கடமையை ஆற்றும் என்று தெரிவித்துள்ளாா்.