தமிழக அரசின் தலையீட்டால் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் துணைப் பொதுச்செயலா் சந்தியூா் ராசா பாா்த்திபன் தெரிவித்தாா்.
அக்கட்சியின் பொதுச்செயலா் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்தாா்.
விமான நிலையத்தில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது, துணைப் பொதுச்செயலா் சந்தியூா் ராசா பாா்த்திபன் கூறியது:
தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்கள், சத்துணவு ஊழியா்கள் தொடா்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனா். தமிழக அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தோ்தல் நேரத்தில் ஊக்கத்தொகை கொடுத்து வருகிறாா்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடா்பாக சிபிஐ உயா்நீதிமன்றத்தில் உத்தரவு கொடுத்தும், 5 முறை தலையிட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது. இதனால், குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறோம் என்றாா் அவா்.