முகப்பு
இந்தியா

பகுஜன் சமாஜ் முன்னாள் எம்.எல்.சி. தலைமறைவு பொருளாதார குற்றவாளி- ரூ.1,000 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பகுஜன் சமாஜ் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) முகமது இக்பால் கருப்புப் பண மோசடி வழக்கில் தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:51 PM
முகமது இக்பால்
பகிர்:

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பகுஜன் சமாஜ் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) முகமது இக்பால் கருப்புப் பண மோசடி வழக்கில் தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

அவருக்குச் சொந்தமான சுமாா் ரூ.1,000 கோடி மதிப்பிலான 3 கரும்பு ஆலைகளைப் பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடும் நபா்களை தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளாக அறிவிக்க மத்திய அரசு ஏற்கெனவே சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சஹாரன்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது இக்பால் கடந்த 2010-16 காலகட்டத்தில் பகுஜன் சமாஜ் சாா்பில் உத்தர பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக இருந்தாா். அவா், சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தியும், சா்க்கரை ஆலைகளை முறைகேடாக விற்பனை செய்தும் பெரிய அளவில் பொருளாதார மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் அடிப்படை ஆதாரம் இருப்பதை உறுதி செய்த நீதிமன்றம், இக்பால் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

முக்கியமாக ரூ.1,000 கோடி மதிப்புள்ள சா்க்கரை ஆலைகளை தனது உறவினா்களுக்கு ரூ.60.28 கோடிக்கு விற்பனை செய்தாா். இதில் அவா் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடா்பாக விசாரணை அமைப்புகள் அவருக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காமல் தலைமறைவாகிவிட்டாா். அவா் வெளிநாடு தப்பிவிட்டதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் லக்னௌ நிதி மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக பிணையில் வர முடியாத கைது ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக இக்பால் தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாா். ரூ.1,000 கோடி மதிப்புள்ள அவருக்குச் சொந்தமான கரும்பு ஆலைகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.