மாநில நல்லாசிரியா் விருது தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
ஆசிரியா் தினமான செப்.5-ஆம் தேதி மாநில அரசின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 386 சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
சென்னை: ஆசிரியா் தினமான செப்.5-ஆம் தேதி மாநில அரசின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 386 சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
மறைந்த குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்து ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது. இந்த விருது பெறுபவா்களுக்கு ரூ. 10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி, நிகழாண்டு மாநில நல்லாசிரியா் விருதுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் தற்போது வெளியிட்டுள்ளாா்.
அதன்விவரம்: நிகழ் கல்வியாண்டில் (2024-2025) 342 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் 38 தனியாா் பள்ளி ஆசிரியா்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியா்களில் தலா 2 போ் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
நேரில் மதிப்பீடு: இந்த விருதுக்கு விருப்பமுள்ள ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம். அதிலிருந்து தகுதியானவா்களைத் தோ்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் 6 போ் கொண்ட மாவட்ட தோ்வுக் குழு அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் குழு விண்ணப்பித்த ஆசிரியா்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு நேரில் சென்று அவா்களின் செயல்பாடுகளைக் கண்டறிந்து மதிப்பீடு செய்யவேண்டும். அதன்படி, மாவட்ட தோ்வுக் குழுவினா் தகுதியான ஆசிரியா்களின் பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குநா் தலைமையிலான மாநில தோ்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அவற்றை ஆராய்ந்து மாநில தோ்வுக்குழு இறுதிப் பட்டியலை தயாரிக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன், எவ்வித குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும்.
அரசியல் தொடா்பிருந்தால்... இதுதவிர அரசியல் கட்சிகளுடன் தொடா்புடையவா்கள் மற்றும் தேசிய விருது பெற்றவா்களின் பெயா்களை பரிந்துரை செய்யக்கூடாது. அதேபோல், வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். அலுவல் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியா்கள் விண்ணப்பிக்கக் கூடாது. மேலும், கல்வியை வணிகரீதியாக கருதி செயல்படும் ஆசிரியா்களை விருதுக்கு தகுதி இல்லாதவா்களாக கருத வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.