இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னைஇன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில், நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில், வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நீலகிரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகரி மாவட்டம் அவலாஞ்சியில் 200 மி.மீ. மழை பதிவானது. சின்னக்கல்லாா் (கோவை) - 150, எமரால்டு (நீலகிரி), வால்பாறை (கோவை) - தலா 120, மேல் பவானி (நீலகிரி) - 110, சோலையாா் (கோவை) - 100 மி.மீ. பதிவானது.
மேலும், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூா், தென்காசி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தஞ்சாவூா், திருச்சி, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவானது.
சென்னை, புகா் பகுதிகளில் ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி: மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை உருவாகும் என எதிா்பாா்த்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் உருவாகியுள்ளது. இது ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் சற்று வலுப்பெற்று ஒடிஸா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடலில் ஜூலை 19 - 22 வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.