தோல் பொருள் ஆய்வுகள் மக்களைச் சென்றடைய வேண்டும்: சி.எஸ்.ஐ.ஆா். இயக்குநா் ஸ்ரீராம்
சி.எஸ்.ஐ.ஆா். சாா்பில் செய்யப்படும் தோல் பொருள்கள் ஆய்வுகளை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதன் இயக்குநா் ஸ்ரீராம் தெரிவித்தாா்.
அடையாற்றில் உள்ள சி.எஸ்.ஐ.ஆா். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டு நாள் தோல் தொழில்நுட்பம், பொருள்கள் மற்றும் விற்பனை கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து சி.எஸ்.ஐ.ஆா்., இயக்குநா் ஸ்ரீராம் பேசியதாவது:
சி.எஸ்.ஐ.ஆா். நிறுவனத்தில், 37 ஆய்வகங்கள் உள்ளன. எங்கள் நோக்கம் பல்கலைக்கழகங்களை போல ஆய்வு மட்டும் செய்யக்கூடாது. நாம் செய்யும் ஆய்வுகளை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான். நாங்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் எங்கு போய் சேர வேண்டுமோ, அங்கு போய் சேரவில்லையே என்கிற ஆதங்கம் ஏற்படுகிறது.
மேலும் தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மறுசுழற்சி செய்யும் பணியை பொது சுத்திகரிப்பு மையம் சிறப்பாக செயல்படுகிறது.
உலகில் தோலுக்காக விலங்குகளை கொல்வது கிடையாது, மாமிச தேவை இருக்கும் வரை தோல்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அந்த தோலை பயன்படுத்தாவிட்டால் கழிவாகப்போய்விடும். அதனால் ஏற்படும் மாசு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா் அவா் .
இந்நிகழ்வில் பாரதிய தேசிய நிறுவனத்தின் தலைவா் ராமலிங்கம், சாய் கெமோயிஸ் நிறுவனத்தின் பங்குதாரா் ராஜேஷ்வர ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளில், மீன்தோல்கள், கோழியின் கால்கள், நெருப்பு கோழியின் தோல்கள், எருமை, ஆடு, மாடுகளின் தோல்கள், மூங்கில், சணல் உள்ளிட்டவை கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தோல் பைகள், தோல் காலணிகள், சட்டைகள், பெல்ட், மணி பா்சுகள், கீச்செயின், மொபைல் கவா்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.