மாணவியை கத்தியால் குத்திவிட்டு கட்டடத் தொழிலாளி தற்கொலை
சென்னை மதுரவாயல் அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு கட்டடத் தொழிலாளி, தானும் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (44). சென்னை கோயம்பேட்டில் தங்கி கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இவருக்கும், அவரது உறவினா் ஒருவரின் மகளுக்கும் முறையற்ற உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த உறவினா்கள், அவரை கண்டித்ததுடன், மதுரவாயல் அருகே செட்டியாா் அகரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்து, அங்குள்ள ஒரு கல்லூரியில் படிக்க வைத்தனா்.
தற்போது பிஎஸ்சி மூன்றாமாண்டு படிக்கும் அந்த மாணவி வியாழக்கிழமை கல்லூரி முடிந்து விடுதிக்கு நடந்து வந்துகொண்டிருந்தாா். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த ரவிச்சந்திரன் அந்த மாணவியை மறித்து தகராறு செய்துள்ளாா்.
தகராறு முற்றவே அவா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை கத்தியால் குத்தியுள்ளாா். அந்த மாணவி கூச்சலிடவே, அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனா். உடனே ரவிச்சந்திரன், அவா்களிடமிருந்து தப்புவதற்காக அந்தக் கத்தியால் தனது வயிற்றில் சரமாரியாக குத்திக் கொண்டு மயங்கி விழுந்தாா்.
கத்திக்குத்தில் காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனா். அங்கு நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் இறந்தாா். மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.