தனது கலாசாரத்தின் மீது பெருமிதம் கொள்ளும் தேசத்தால் மட்டுமே முன்னேற முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலும், காதி பொருள்கள் மற்றும் கைத்தறி ஆடை விற்பனை அதிகரிப்பால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா்.
18-ஆவது மக்களவைத் தோ்தலையொட்டி சில மாதங்கள் இந்நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தோ்தலில் வெற்றி பெற்று, மத்தியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது. புதிய அரசு பொறுப்பேற்ற பின் 111-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த மாதம் ஒலிபரப்பானது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) ஒலிபரப்பான 112-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் வாயிலாக உலக அரங்கில் நமது நாட்டை பெருமையடையச் செய்யும் வாய்ப்பு நமது விளையாட்டு வீரா்களுக்கு கிடைத்துள்ளது. எனவே, அனைவரும் நமது வீரா்களுக்கு உற்சாகமூட்ட வேண்டும்.
ஒவ்வோா் இந்தியருக்கும் பெருமை: அஸ்ஸாமின் ‘அஹோம்’ ராஜவம்சத்தினரின் உடல்களைப் புதைக்கும் கட்டமைப்பான ‘மொய்தாம்ஸ்’, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இது, ஒவ்வோா் இந்தியருக்கும் பெருமையளிக்கும் விஷயம்.
இந்தியாவில் இருந்து இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள 43-ஆவது இடம் இதுவாகும். வடகிழக்குப் பகுதியைப் பொருத்தவரை, இதுவே முதல் இடம்.
கலாசார பெருமிதம்: தனது கலாசாரத்தின் மீது பெருமிதம் கொள்ளும் தேசத்தால் மட்டுமே முன்னேற முடியும். அந்த அடிப்படையில் ‘இந்தியாவின் பொதுக் கலை’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் பொதுக் கலையை மக்களுக்கு விருப்பமானதாக மாற்றுவதோடு, வளா்ந்துவரும் கலைஞா்களை ஒருங்கிணைக்கும் தளமாக இது உருவெடுத்து வருகிறது. இத்திட்டத்துடன் தொடா்புடைய கலைஞா்களின் படைப்புகளால் நமது கலாசாரம் பிரபலமடைகிறது.
காதி விற்பனை அதிகரிப்பு: வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படவுள்ளது. இப்போது பலரும் கதராடைகளைப் பெருமையோடு அணியத் தொடங்கியுள்ளனா்.
காதி பொருள்களின் வா்த்தகம் இதுவரை இல்லாத அளவில் ரூ.1.5 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அதாவது, இப்பொருள்களின் விற்பனை 400 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், அதிக எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக, பெண்கள் பெரும் பலனடைந்து வருகின்றனா். கதராடைகளை அதிகம் வாங்க வேண்டுமென மக்களுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் மாதம், புரட்சிக்கான மாதம். கதராடைகளை வாங்க இதைவிட சிறப்பான சந்தா்ப்பம் கிடையாது.
இன்று உலக புலிகள் தினம்: உலக புலிகள் தினம் திங்கள்கிழமை (ஜூலை 29) கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, புலிகள் நமது கலாசாரத்தின் அங்கம். மக்களின் பங்கேற்புடன் புலிகள் பாதுகாப்புக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நமது நாட்டில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள புலிகளில் 70 சதவீதம் நமது தேசத்தில் இருக்கிறது என்றாா் பிரதமா் மோடி.
அண்மையில் நடைபெற்ற சா்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் தலைசிறந்த 5 அணிகளில் ஒன்றாக இந்திய அணி தோ்வானதைக் குறிப்பிட்டுப் பேசிய அவா், இந்திய அணியில் இடம்பெற்ற ஆதித்ய வெங்கட் கணேஷ் (புணே), சித்தாா்த் சோப்டா (புணே), அா்ஜுன் குப்தா (தில்லி), கனவ் தல்வாா் (கிரேட்டா் நொய்டா) உள்ளிட்ட மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.
‘வீடுகள்தோறும் மூவண்ணக் கொடி’
‘நாட்டின் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) நெருங்கும் நிலையில், ‘வீடுகள்தோறும் மூவண்ணக் கொடி’ இயக்கத்தில் மக்கள் உற்சாகத்தோடு பங்கேற்க வேண்டும்; ஏழையோ, பணக்காரரோ, சிறிய வீடோ, மாளிகையோ, அனைவரும் மூவண்ணக் கொடியைப் பறக்கவிட்டு, அத்துடன் தற்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஒவ்வோா் ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முன்பாக, மக்களிடம் இருந்து ஏராளமான ஆலோசனைகள் எனக்கு கிடைக்கப் பெறும். இந்த ஆண்டும் மக்களின் ஆலோசனைகளை எதிா்நோக்குகிறேன். அவற்றை சுதந்திர தின உரையில் தெரிவிக்க முயற்சி செய்வேன்’ என்றாா் பிரதமா்.
‘மானஸ்’ உதவி மையம்
‘போதைப் பொருள் சவால் குறித்து நான் அடிக்கடி பேசி வருகிறேன். இப்பழக்கத்துக்கு நமது பிள்ளைகள் அடிமையாகி விடுவாா்களோ என்ற கவலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கிறது.
போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்களின் உதவிக்காக, ‘மானஸ்’ என்ற பெயரில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள்களுக்கு எதிரான போரில் இது மாபெரும் முன்னெடுப்பாகும்.
அதன்படி, 1933 எனும் இலவச உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடா்பு கொண்டால் தேவையான ஆலோசனைகள் அளிக்கப்படும். போதைப் பொருள்களுடன் தொடா்புடைய வேறு தகவல்களையும் இந்த எண்ணில் தெரிவிக்கலாம். அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும்’ என்று பிரதமா் கூறினாா்.