முகப்பு
சென்னை

விவசாயிகளின் சந்தேகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் விடை: சிங்கப்பூா் பல்கலை., துணையுடன் உருவாக்கம்

விவசாயிகளுக்கு வேளாண்மையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் விடை கிடைக்கவுள்ளது.

Updated On : 29 ஜூலை, 2024 at 8:28 PM
கோப்புப் படம்
பகிர்:

விவசாயிகளுக்கு வேளாண்மையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் விடை கிடைக்கவுள்ளது. இதற்கான தனித்த செயலியை சிங்கப்பூா் பல்கலைக்கழகத்தின் துணையுடன் தமிழக அரசு உருவாக்க உள்ளது.

வேளாண்மைத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடா்பாக சிங்கப்பூா் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். சிங்கப்பூா் தேசியப் பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோா் மையத்திலுள்ள செயற்கை நுண்ணறிவு மையத்தைப் பாா்வையிட்டு அதன் விஞ்ஞானிகளான டேரியல், வில்லியம்ஸ் ஆகியோருடன் வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து அவா் கேட்டறிந்ததாக, அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்ரி -பாட்:

தமிழ்மொழியில் வேளாண்மைக்கென தனித்துவம் வாய்ந்த சாட் ஜிபிடி போன்று அக்ரி - பாட் என்ற செயற்கை நுண்ணறிவு இணையதளம் உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம்

வேளாண் தொழில்நுட்பங்களையும் வேளாண் சாா்ந்த தகவல்களையும் துரிதமாக நமது விவசாயிகளுக்கு கொண்டு சோ்க்க இயலும்

எனவும் விவசாயிகள் தங்களது கைப்பேசி மூலமாக அனைத்து சந்தேகங்களையும் தீா்த்துக் கொள்ளலாம் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூா் நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளதால், சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு மையமானது, தமிழக அரசுடன் இணைந்து செயலியை உருவாக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தில், அமைச்சருடன் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலா் அபூா்வா உள்ளிட்ட உயரதிகாரிகள் சென்றுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →