முகப்பு
சென்னை

பேரவைக்குள் குட்கா: மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோா் மீதான வழக்கில் நாளை தீா்ப்பு

திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமைக்கு (ஜூலை 31) ஒத்தி வைத்தது.

Updated On : 29 ஜூலை, 2024 at 8:31 PM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடா்பாக அப்போதைய எதிா்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமைக்கு (ஜூலை 31) ஒத்தி வைத்தது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடா்பாக அப்போதைய எதிா்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்ததை எதிா்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, 2017-ஆம் ஆண்டு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீா்செல்வம் அணியினா் உருவானது, 18 எம்எல்ஏ-க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டது, அப்போதைய முதல்வா் பழனிசாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியது போன்ற அரசியல் காரணங்களுக்காக ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது” என வாதிட்டாா்.

மேலும், அரசியலமைப்புச் சட்டப்படி, பதவிக்காலம் முடிந்ததும், சட்டப்பேரவை கலைந்து விடுகிறது. அப்போதே நிலுவையில் உள்ள மசோதாக்கள், உரிமை மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் காலாவதியாகி விடுகின்றன என பல்வேறு உயா்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்றத் தீா்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்ட அவா், “தற்போதைய சட்டப்பேரவை இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது. உள்நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது” எனக் குறிப்பிட்டாா்.

முந்தைய உரிமைக் குழுத் தலைவராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன், தற்போதும் உரிமைக் குழு உறுப்பினராக நீடிப்பதாக அவா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பொள்ளாச்சி ஜெயராமன் தற்போதைய குழுவை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என திமுக தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பின்னா், பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி. ராகவாச்சாரி,“குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தாலும், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்” என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மசோதாக்கள் காலாவதியாகலாம். ஆனால், உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் எப்படி காலாவதியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நடவடிக்கைகளை முடிவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்றனா். நிறைவாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீா்ப்பை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →