முகப்பு
தமிழ்நாடு

தில்லியா? தமிழ்நாடா? என்பதே 2026 தேர்தல் - மு.க. ஸ்டாலின்

தேர்தலை மனதில் வைத்துக்கூட தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என மு.க. ஸ்டாலின் பேச்சு.

Updated On : 9 மார்ச், 2026 at 8:18 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - படம் - யூடியூப் / MK Stalin
பகிர்:

தேர்தலை மனதில் வைத்துக்கூட தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டங்களையும் மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 9) விமர்சித்தார்.

புதிதாக எந்தவொரு ஏவல் அமைப்பை அழைத்துவந்தாலும் தமிழகத்திற்குள் விடமாட்டோம் என்றும், தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திருச்சியில் 12 வது மாநில மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

Advertisement

நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

''தமிழகத்தை காத்தவர்கள் நாம். தமிழ் மண்ணுக்கு அரணாக இருப்பது திமுக. திருச்சி என்றாலே திருப்பம். திருச்சி என்றாலே எழுச்சி, திருச்சி என்றாலே மகத்தான வெற்றி.

கல்லக்குடி போராட்டம் நடைபெற்றது திருச்சியில்தான். அண்ணா, பெரியார் ஒரே சிறையில் இருந்தது திருச்சியில்தான்.

7 முறைகள் மட்டுமல்ல, எந்த நாளும் தமிழகத்தை திமுக ஆள வேண்டும் என்று சூளுரைப்போம்

தமிழகம் நம்மை நம்பியே உள்ளது. நாமும் தழகத்தை நம்பியே இருக்கிறோம். எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம்முன்னேறி இருக்கிறோம். கெத்தாக இதை நாம் சொல்லிக்கொள்ளலாம்.

திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தந்துள்ளோம். தமிழ்நாடு முதன்மை மாநிலம் என மத்திய அரசே கூறியுள்ளது. நாம்தான் சூப்பர் ஸ்டார் மாநிலம் என பத்திரிகைகள் கூறுகின்றன.

2021 தேர்தலுக்கு முன் 7 இலக்குகளை உறுதி அளித்தேன். அதை நிறைவேற்றியதால் மக்கள் மகிழ்வோடு உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் 471 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; திமுக ஆட்சியில் 1190 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் ரூ. 4.13 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது; திமுக ஆட்சியில் 3 மடங்கு அதிகரித்து ரூ. 13.57 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் 2045 ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சியில் 13,500க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

49 லட்சம் பேருக்கான மருத்துவக் காப்பீட்டை 90 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம். நமது திட்டங்களை காப்பி அடித்து எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்து வருகிறது. அதற்காகத்தான் இன்ஸ்டால்மென்ட்டில் தேர்தல் அறிக்கையை விடுகிறது.

மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மகளிர் நிதி பயனாளிகள் மட்டும் 1.3 கோடி பேர். பெண்கள் பயணத் திட்டத்தை நிறுத்த முடியுமா? திமுக அரசின் திட்டப் பயனாளிகள் வாக்களித்தாலே போதும்.

கூட்டணிக்கே பெயர் வைக்க முடியாத நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது. அந்தக் கூட்டணி தமிழகத்துக்கு என்ன செய்தது? ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுத்தனர். எந்தளவு வன்மம் இருந்தால் தேர்தலைக் கூட மனதில் வைத்துக்கொள்ளாமல் திட்டம் எதையும் அறிவிக்கவில்லை?

காவிக் கூட்டத்தை கருப்பு சிவப்பு படை ஒருபோதும் தமிழகத்திற்குள் விடாது'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.

summary

DMK President and Chief Minister M.K. Stalin addressed the 12th state conference in Trichy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.