மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை திமுக அவமதித்து வருவதாக இபிஎஸ் விமர்சனம்...
மறைந்த தலைவர்களை தான் அவமதிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 13) தெரிவித்தார்.
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பேசி, அவமதித்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுகதான் என்றும், காமராஜரை அவமதித்த திருச்சி சிவாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்தாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
திருச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 13) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''அதிமுக ஆட்சியில் ரூ. 3,500 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்தன. அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களால் இப்போது தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள தொழில் வளர்ச்சி, பொருளாதார பலன்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களால் கிடைத்து வருகின்றன. அதிமுக உழைப்புக்கான அறுவடையை மு.க. ஸ்டாலின் செய்து வருகிறார்.
மறைந்த தலைவர்களை நான் அவமதிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் தலைவர்கள் குறித்து விமர்சித்தால், அதிமுகவும் அந்த வகையிலேயே பதிலடி கொடுக்கும். அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை திமுகதான் அவமதித்து வருகிறது. காமராஜரை அவமதித்த திருச்சி சிவாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்தாரா?
பணத்தை திருடுவார்கள், நகையை திருடுவார்கள், ஆனால் திமுக ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள்.
திமுக ஆட்சியில் வறுமையே இல்லை என்கிறார் மு.க. ஸ்டாலின். ஆனால், ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி கிட்னி முறைகேடுகள் நடத்தப்படுகிறது.
கிட்னி முறைகேடில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மருத்துவமனை உரிமையாளர் கைது செய்யப்பட்டாரா? அதிமுக ஆட்சி அமைந்ததும் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றால், உங்கள் உறுப்புகள் இருக்கிறதா? என்று ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். மனசாட்சி உள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தகையவர்களுக்கு கொடுக்கும் தண்டனைதான் நீங்கள் அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு.
பத்திரிகை சுதந்திரத்தை திமுக முடக்குகிறது. திமுக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசுத் திட்டங்களுக்கு கொடுத்த செல்போன் எண்கள் வைத்து முறைகேடு நடத்தப்படுகிறது.
அதிமுக கொண்டுவந்த பல திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ளது திமுக. பல திட்டங்களை ரத்து செய்துவிட்டது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கொடுத்தோம். 5 ஆண்டுகளில் 2 முறை விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது அதிமுக. அதை திமுக ஒழித்துவிட்டது.
நகர்ப்புற வளர்ச்சித்துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை ஆதாரத்தை திரட்டி வழக்குப் பதிவு செய்ய முறையிட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வைத்து 5 ஆண்டுகளில் ரூ. 24 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர். அவர் சிறையில் இருந்து வந்ததை மு.க. ஸ்டாலின் கொண்டாடுகிறார். அவர் சுதந்திர போராட்ட தியாகியா? ஊழல் செய்து உள்ளே சென்றவர் தானே?
மின்சார கட்டணம், குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி ஏன் குப்பைக்கு கூட வரி விதித்துள்ளது திமுக அரசு. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த பிரச்னைகள் தீர்க்கப்படும்.
அதிமுக ஆட்சியில் அதிக மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டதாக பள்ளிகளை மூடுகிறார் திமுக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். மக்களுக்காகத்தானே அரசாங்கம். அசாங்கத்திற்காக மக்கள் இல்லையே'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Tn election 2026 Did not insult late leaders: Edappadi palanisamy campaign in trichy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.