தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? - மு. க. ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருப்பது குறித்து...
விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,
Advertisement
Advertisement
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் தவெக. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது மாற்றுப் பாதையைப் பின்பற்றும் தவெக அரசு.
சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் தனது வழக்குரைஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்காத தவெக அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், விளைவுகள் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Is it the rule of law or the rule of Satan that prevails in Tamil Nadu?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.