ஊழலற்ற, சட்டம்-ஒழுங்கில் சீர்குலைவு இல்லாத ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும்: செல்வப்பெருந்தகை
தேர்தலில் திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது தமிழக மக்கள் தங்களது எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டியது மிக மிக அவசியமாகும். தமிழக அரசியல் மற்றும் தேசிய அளவிலான அரசியலையும் மனதில் வைத்துக்கொண்டு எந்த கூட்டணிக்கு வாக்களிப்பது என்பதை வாக்காளப் பெருமக்கள் மிக ஆழமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக மு.க. ஸ்டாலின் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி செயல்பட்டதை எவரும் மறுக்க முடியாது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த மொத்த வாக்குறுதிகளில் 505 இல் 400-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை புரிந்திருக்கிறார். மீதியுள்ள வாக்குறுதிகள் பாஜக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை.
Advertisement
இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதோடு, சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்கிற ஒரு கருத்தியலை மு.க. ஸ்டாலின் உருவாக்கியிருக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்கிற பாஜக, தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வில் பாரபட்சம், புதிய கல்விக் கொள்கை என்கிற போர்வையில் மும்மொழி திணிப்பு, கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு திணிப்பு, வெள்ள நிவாரண நிதி புறக்கணிப்பு, மெட்ரோ ரயில் திட்ட புறக்கணிப்பு என வஞ்சிக்கப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
அந்தளவிற்கு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாஜக அரசு இதுவரை நடத்தியிருக்கிறது. ஆனால், நிதிப் பகிர்வில் எத்தகைய அநீதிகள் இழைக்கப்பட்டாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு, மாநில அரசின் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிற பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கிற அதிமுக, இதுவரை தமிழ்நாட்டின் உரிமைக்காக பேசியது கிடையாது.
இன்றைய அதிமுக என்பது பாஜகவின் ஊதுகுழலாக, கைப் பாவையாக, அடிமை கட்சியாக மாறி விட்டது. அதிமுக என்ற முகமூடி அணிந்து கொண்டு பாஜக தமிழ்நாட்டில் நுழைய முற்படுகிறது. அதனால் தான் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின ஆகியோர் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கும், தில்லிக்கும் நடைபெறுகிற தேர்தல் என்று பிரகடனம் செய்தனர். இதன்மூலம் பாஜகவின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள அதிமுக கூட்டணியை புறக்கணிக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் முதல் ஜனநாயகக் கடமையாகும்.
கடந்த 2019, 2024 மக்களவை தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக, வகுப்புவாத ஊழல் சக்திகளை எப்படி தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்து, திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக ஆதரவு அளித்ததைப்போல, அதைவிட பேராதரவு அளித்து 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
கொளத்தூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, இல்லத்தரசிகளுக்கு ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெழுத்து போடுவேன் என்று உறுதி கூறியிருக்கிறார். இதை ரொக்கமாக வழங்காததன் நோக்கம் இந்த கூப்பன் மூலம் மக்கள் தங்களது வீட்டிற்கு தேவையான எந்த பொருளை வாங்க விரும்புகிறார்களோ, அதை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ரூ. 10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, முதியோர் மற்றும் கைம்பெண் ஊதியம் இனி மாதம் ரூ. 2,000, மகளிர் உரிமைத்தொகை இனி மாதம் ரூ. 2,000, கட்டணமில்லா விடியல் பயணம் என்றென்றும் தொடரவும், காலை உணவு திட்டம் இனி 8 ஆம் வகுப்பு வரை என உறுதிமொழிகளை கூறியிருக்கிறார்.
விவசாயிகள் வாழ்வில் வளம் பெற 20 லட்சம் புதிய நவீன மின்சார பம்பு செட்டுகள், இனி நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 என வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள், ரூ. 10,000 கோடியில் கிராமப்புற சாலைகள், 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள், 35 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்.
ஏற்கெனவே, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய மு.க. ஸ்டாலின், தற்போது கொடுத்துள்ள வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கையும் தமிழ்நாட்டு மக்களிடம் உருவாகியிருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளோ, முறைகேடுகளோ, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவோ எதுவும் ஏற்படாமல் மாநில உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்பி வருகிற மு.க. ஸ்டாலின், மாநிலம் கடந்து தேசிய அளவிலும் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறார். கடந்த அதிமுக ஆட்சி என்பது தமிழ்நாட்டின் இருண்ட காலம்.
சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு சாத்தான்குளத்தில் தந்தை - மகன் லாக்கப்பில் படுகொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி, பாலியல் பலாத்காரத்திற்கு பொள்ளாச்சி, நிர்மலா தேவி விவகாரம் உள்ளிட்ட பட்டியலே சாட்சியாகும்.
எனவே, மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடர வாக்காளர்களுக்கு நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திகழச் செய்த பெருமை மு.க. ஸ்டாலினுக்கு உண்டு. அவரது ஆட்சி என்பது மகளிருக்கான விடியலாக அமைந்திருக்கிறது.
கூட்டணி கட்சியினரை அரவணைத்துக் கொண்டு, அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நல்லிணக்கத்தோடு ஆட்சி செய்த மு.க. ஸ்டாலின் ஆட்சியை ஒரு பொற்கால ஆட்சியாகவே மக்கள் கருதுகிறார்கள்.
இந்த அடிப்படையில் நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் தமிழ்நாட்டு மக்கள் தங்களது மேலான வாக்குகளை திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களித்து அமோக ஆதரவு வழங்கி மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்திற்கேற்ப உங்கள் நல்லாதரவினை வழங்க வேண்டுமென இருகரம் கூப்பி அன்போடு வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.