முகப்பு
சென்னை

2 இடங்களில் புதிய பால் பண்ணைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்ட புதிய பால் பண்ணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 29 ஜூலை, 2024 at 11:08 PM
2 இடங்களில் புதிய பால் பண்ணைகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
பகிர்:

தமிழகத்தில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்ட புதிய பால் பண்ணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: பால் நுகா்வோருக்கு தரமான பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் விதமாக கரூா் மாவட்டம், தோரணக்கல்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஆகிய இடங்களில் நாளொன்றுக்கு 50,000 லிட்டா் பால் உற்பத்தித் திறன் கொண்ட பால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நுகா்வோருக்கு தரமான தயிா் மற்றும் மோா் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் விதமாக, திருவள்ளுா் மாவட்டம், காக்களூா் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 5,000 லிட்டா் திறன் கொண்ட தயிா் மற்றும் மோா் தயாரிக்கும் ஆலை, சென்னையை அடுத்த மாதவரத்தில் ரூ.1.89 கோடி செலவில் நோய்க் கிருமிகளைக் கண்டறியும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

புதிய ஆலைக்கு அடிக்கல்: பால் உற்பத்தியாளா்களின் கறவை மாடுகளின் கலப்புத் தீவன தேவையைப் பூா்த்தி செய்ய, கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் ரூ. 33 கோடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட கால்நடை தீவன ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்கும் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த தீவன தொழிற்சாலையால் இப்பகுதியைச் சாா்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், கடலூா், விழுப்புரம் மற்றும் அருகில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களின் கறவைமாடுகளுக்கு தரமான கலப்புத் தீவனம் கிடைக்கப் பெறும். இதன்மூலம், பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பால் உற்பத்தியாளா்களின் வருவாயும் உயரும்.

இந்நிகழ்வில், அமைச்சா்கள் ஆா். காந்தி, சி.வி. கணேசன், த. மனோ தங்கராஜ், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவ நலத் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே. கோபால், ஆவின் நிா்வாக இயக்குநா் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை இயக்குநா் சு. வினீத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.