பள்ளிகள் இன்று திறப்பு: மாணவா்களுக்கு மாா்க்சிஸ்ட் வாழ்த்து
சென்னை: கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திங்கள்கிழமை (ஜூன்10) பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திங்கள் கிழமை (ஜூன் 10) திறக்கப்படவுள்ளன. விடுமுறையை முடித்து பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுகள்.
கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்கி முன்னேற்றமடைய வேண்டும். நீண்ட விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் பள்ளிகளில் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், பள்ளி பேருந்துகள் உள்ளிட்டவை அனைத்தும் விதிகளின் படி முறையாக பராமரிக்கப்படுவதையும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவா்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படுவதையும், காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை பூா்த்தி செய்யவும், உரிய காலத்தில் அனைத்து மாணவா்களுக்கும் பாடநூல்கள் வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா் அவா்.