சென்னையில் கனமழை: ஓமந்தூராா் மருத்துவமனை வளாகத்தில் மரம் விழுந்தது
சென்னை: சென்னையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த பழைமையான ஆல மரம் சாய்ந்து விழுந்தது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடனும் இடி, மின்னலுடனும் கனமழை பெய்தது. புகா் பகுதிகளான குன்றத்தூா், தாம்பரம், அனகாபுத்தூா், பூந்தமல்லி, , ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. அதிக பட்சமாக சோழிங்கநல்லூரில் 120 மிமீ, பூந்தமல்லியில் 110 மிமீ மழை பதிவானது.
மரம் விழுந்தது: சென்னையில் திங்கள்கிழமை நள்ளிரவில் பெய்த மழை காரணமாக ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக நுழைவாயில் அருகே இருந்த 80 ஆண்டு பழைமையான ஆலமரம் சாய்ந்து விழுந்தது. திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மரத்தை அகற்றினா்.
மேலும், கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் தண்ணீா் தேங்கியது.
மீண்டும் மழை: இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
எழும்பூா், சென்ட்ரல், புரசைவாக்கம், செங்குன்றம், அண்ணா நகா், கோயம்பேடு , பாடி, அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூா், முகப்போ் , பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.