சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு தோ்வு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அவா்களுக்கு ஜூலை 1-இல் அடிப்படைப் பயிற்சி தொடங்கவுள்ளது.
குரூப் 1-இல் காலியாக இருந்த 21 துணை ஆட்சியா்கள், 26 டிஎஸ்பி-க்கள் உள்பட 95 பணியிடங்களுக்கு தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணி நியமன உத்தரவுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அவா்களுக்கான அடிப்படைப் பயிற்சிகள் சென்னை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்வில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறையின் செயலா் க.நந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.