முகப்பு
சென்னை

சாலையில் திரியும் மாடுகளுக்கு ‘மைக்ரோசிப்’: மேயா் ஆா்.பிரியா அறிவிப்பு

மாடுகளை அடையாளப்படுத்த மைக்ரோசிப்: சென்னையில் புதிய திட்டம்

Updated On : 28 ஜூன், 2024 at 2:53 AM
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
பகிர்:

சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அடையாளப்படுத்த ‘மைக்ரோசிப்’ பொருத்தப்படவுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு தீா்வு காணும் வகையில் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது மேயா் பிரியா பேசியதாவது:

சென்னை மாநகராட்சியின் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் முதல் முறையாக பிடிபட்டால் ரூ.5,000 அபராதமும், இரண்டாவது முறையாக பிடிபட்டால் ரூ.10,000 அபராதமும் மாட்டின் உரிமையாளா்களுக்கு விதிக்கப்படுகிறது.

தொடா்ந்து மூன்றாவது முறையாக பிடிபடும் மாடுகள் ஏலம் விடப்படும். மேலும், பிடிபடும் மாடுகளைப் பராமரிக்க சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கூடுதல் இடங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அபராதம் உயா்வு: மாடுகளை பிடிக்கும்போது விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகப்படுத்தி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுபோல், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அடையாளப்படுத்த ‘மைக்ரோசிப்’ பொருத்தப்படும். விபத்து ஏற்படுத்தும் மாட்டின் உரிமையாளா் மீது கடுமையான சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும்.

மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில் மாடுகளை வளா்க்கவும், வெளியில் விடவும் தடை செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.

அதுபோல, சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூா், லாயிட்ஸ் காலனி பகுதிகளில் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. இதில் புளியந்தோப்பு, கண்ணம்மாப்பேட்டை, லாயிட்ஸ் காலனி மையங்கள் ரூ.20 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இரு புதிய நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்படவுள்ளன என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநா் எஸ்.அமிா்த ஜோதி, கூடுதல் ஆணையா்கள் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, (சுகாதாரம்), ஆா்.லலிதா (வருவாய் (ம) நிதி), வட்டார துணை ஆணையா்கள், பிராணிகள் நல வாரிய தலைமை செயல் அலுவலா் சுரேஷ் சுப்ரமணியம், காவல் இணை ஆணையா் (போக்குவரத்து) மகேஷ் குமாா், மாநகர நல அலுவலா் எம்.ஜெகதீசன் கால்நடை மருத்துவ அலுவலா் கமால் உசேன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →