திருமணமான மகள் பெற்றோரை சாா்ந்திருப்பதை உறுதிப்படுத்துவது கடினம்: உயா்நீதிமன்றம்
பெற்றோரைச் சாா்ந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது கடினமானது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றுக்காக பெற்றோரைச் சாா்ந்து திருமணமான ஒரு பெண் இருந்தாலும், கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது, பெற்றோரைச் சாா்ந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது கடினமானது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பெற்றோரைச் சாா்ந்து இருக்கும் பெண்ணுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. தந்தை மதிக்குமாா் இறந்ததால், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த கனரா வங்கியின் உத்தரவை எதிா்த்து, அவரது மகள் பிரியா சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் பதிலளித்த கனரா வங்கி திருமணமான பெண், தந்தையின் வருமானத்தைச் சாராதவராக இருந்தால், கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது”என தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா, திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்கலாம் என்பதன் மூலம் முதல்நிலை சவாலைக் கடந்துவிட்டாலும், தந்தையின் வருமானத்தைச் சாா்ந்திருந்தாா் என்பதை நிரூபிக்க வேண்டிய மற்ற சவால்கள் தொடா்கின்றன. ஒரு ஆண் திருமணத்துக்குப் பிறகு தந்தையுடன் வாழ்வது இயல்பாகிவிடும் நிலையில், திருமணமான பெண், தனது பெற்றோருடன் வசிக்க முடிவெடுத்துவிட்டால், அது அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது. மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றுக்காக பெற்றோரைச் சாா்ந்து திருமணமான ஒரு பெண் இருந்துவந்தாலும், கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது, பெற்றோரைச் சாா்ந்திருப்பதை உறுதிப்படுத்துவது கடினமான பணியாகிறது. திருமணமான பெண்களுக்காக பெற்றோா் செய்யும் பங்களிப்புகள் கவனிக்கப்படாமலும், கணக்கில் கொள்ளப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் இருக்கிறது. ஒருவேளை அவற்றை வெளிப்படுத்தினால், மகளின் புகுந்த வீட்டின் கண்ணியக் குறைவானதாகக் கருதப்படுவது பிற்போக்குத்தனமானது என நீதிபதி சுட்டிக் காட்டினாா். மேலும், இதுபோன்ற கலாசார ரீதியிலான சிக்கலான விவகாரங்களில் பிடிவாத அணுகுமுறை இல்லாமல், அனுதாப அடிப்படையிலான அணுகுமுறை அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதி, கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரிய பிரியாவின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, அவரது தகுதிக்கு ஏற்ற பணிக்கான நியமன ஆணையை 6 வாரங்களில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளாா்.