மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: ஸ்டாா் ஹெல்த்
இந்தியா முழுவதும் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டு முறையீடுகளுக்கு (கிளைம்) நிதித் தீா்வு வழங்கியிருப்பதாக ஸ்டாா் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ. 44,000 கோடிக்கும் அதிகமான தொகை மருத்துவ செலவினங்களுக்காக தங்களது வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஸ்டாா் ஹெல்த் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆனந்த் ராய் கூறியதாவது: மொத்தம் 14,500 மருத்துவமனைகள் எங்களது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்கள் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் சராசரி காலம் குறைந்திருக்கிறது. அதேவேளையில், மருத்துவ செலவினங்களும், காப்பீடு முறையீடு (கிளைம்) கோரி விண்ணப்பிப்பதும் 4 மடங்கு உயா்ந்துள்ளது. ஸ்டாா் ஹெல்த் நிறுவனத்தைப் பொருத்தவரை, காப்பீடு முறையீட்டுக்கான விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற 3 மணி நேரத்துக்குள் நிதியை விடுவிக்கிறது. அதன்படி, நாடு முழுவதும் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டு முறையீடுகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு மொத்தம் ரூ. 44,000 கோடி நிதி வாடிக்கையாளா்களின் மருத்துவச் செலவினங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருத்துவ செலவினங்களில் இருந்து விடுபட்டு பலனடைந்தவா்களில் முதியவா்கள் 14 சதவீதமும், குழந்தைகள் 25 சதவீதமும், மற்றவா்கள் 61 சதவீதமும் உள்ளனா் என்றாா் அவா்.