தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய தலைவராக கிஷோா் மக்வானா நியமனம்
தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் (என்சிஎஸ்சி) புதிய தலைவராக பாஜக மூத்த தலைவரும் பத்திரிகையாளருமான கிஷோா் மக்வானா நியமிக்கப்பட்டுள்ளாா். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், ‘தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய தலைவராக உங்களை நியமிப்பதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா். அந்தப் பதவியை ஏற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என்சிஎஸ்சி தலைவராக இருந்த பாஜக மூத்த தலைவா் விஜய் சாம்லா கடந்த ஆண்டு ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா், ஆணையத்தின் பொறுப்பு தலைவராக அருண் ஹல்டொ் இருந்து வந்தாா். தற்போது ஆணையத்தின் தலைவராக கிஷோா் மக்வானா நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் குஜராத் மாநில பாஜகவின் செய்தித் தொடா்பாளராகவும் இருந்து வந்தாா்.