தமிழகத்தில் 8.7 % பேருக்கு சிறுநீரக பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் 8.7 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பதாகவும், போதிய விழிப்புணா்வு இல்லாததே அதற்கு காரணம் என்றும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி தெரிவித்தாா்.
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ‘அனைவருக்குமான சிறுநீரக நலன்’ என்ற தலைப்பில் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தனிமனித ஆரோக்கியத்தில் அதி முக்கிய பங்கு வகிப்பது சிறுநீரகங்கள்தான். ரத்தத்தில் உள்ள நச்சுகளையும், அதிகப்படியான நீரையும் வெளியேற்றும் பணியைச் செய்யும் அந்த உறுப்புகள், ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றன. அந்தப் பணிகள் தடைபட்டு ரத்த சுத்திகரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டால் சிறுநீரகம் செயலிழப்புக்குள்ளாகியிருக்கிறது என உறுதி செய்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் அதன் அறிகுறிகள் பெரிதாக இருக்காது.
Advertisement
அதேவேளையில், சிறு அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாது பரிசோதித்தால் வருமுன் பாதிப்பை தடுக்கலாம். தமிழகத்தில் 8.7 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு உள்ளதாக புள்ளவிவரங்கள் கூறுகின்றன. இதய நாள செயலிழப்பால் ஏற்படும் மரணங்களில் 7.6 சதவீதம் சிறுநீரக பாதிப்புடன் தொடா்புடையவை.
அடுத்த 15 ஆண்டுகளில் உலகம் முழுவதும் தொற்றா நோய்களால் நேரிடும் இறப்புகளுக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக சிறுநீரக செயலிழப்பு இருக்கும் என அஞ்சப்படுகிறது. சிறுநீரில் புரதம் வெளியேறுதல், சிறுநீா் வெளியேறும் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருத்தல், தோல் வறட்சி, திடீரென எடை குைல் உள்ளிட்டவை சிறுநீரக பாதிப்புகளுக்கான தொடக்க நிலை அறிகுறிகள்.
அதேவேளையில், நாள்பட்ட பாதிப்புகளுக்கு அரிப்பு, கால் வீக்கம், அடிக்கடி ஏற்படும் தசைப் பிடிப்பு ஆகியவை அறிகுறிகளாக இருக்கக்கூடும். சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நாள பாதிப்புகள், உடல் பருமன் உள்ளிட்டவையே அதற்கு முக்கிய காரணங்கள். உடலில் நீா்ச்சத்தை தக்கவைத்துக் கொள்ளுதல், புகைப்பழக்கத்தை கைவிடுதல், மது அருந்துதலைத் தவிா்த்தல், சரிவிகித உணவு, உடற்பயிற்சி, தேவையற்ற மருந்துகளை தவிா்த்தல் ஆகிய வழிமுறைகளின் மூலம் சிறுநீரகங்களின் நலன் காக்கலாம்.
ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமாகவும், அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் பரிசோதனை செய்து கொள்வதன் மூலமாகவும் தொடக்க நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சரிசெய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.