FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பெண்களுக்கு ஆரோக்கியம் முக்கியம்...

'பெண்களின் ஆரோக்கியம் பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கியதாகும்.

Updated On : 22 மார்ச் 2026, 4:05 am IST
பகிர்:

'பெண்களின் ஆரோக்கியம் பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கியதாகும். ரத்தச் சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளில் தொடங்கி, உயிருக்கு ஆபத்தான இதய நோய்கள் வரை இடம்பெறுகின்றன.

வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள், நோய்த் தடுப்புக்கான செயல்முறைகளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஆகியன பெண்களது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயங்களை அதிகரிக்கிறது' என்கிறார் சென்னை எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் மருத்துவர் கீர்த்தனா ராஜசேகரன்.

அவருடன் ஒரு சந்திப்பு:

Advertisement

Advertisement

ரத்த சோகை நோய் குறித்து?

ரத்த சோகை (அனீமியா) என்பது அதிகரித்து வரும் பிரச்னையாக இருப்பினும், இன்னமும் போதிய அளவு கவனம் பெறவில்லை. போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாதபோது ரத்த சோகை ஏற்படுகிறது. உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜன் செல்லும் அளவைக் குறைக்கிறது.

மாதவிடாயின்போது உதிரப் போக்கு, ஊட்டச்சத்து குறைபாடுகள், கர்ப்ப காலத் தேவைகள் ஆகியன இனப் பெருக்க வயதிலுள்ள பெண்களுக்கு ரத்த சோகையால் பாதிப்புகளை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது.

15 வயது முதல் 49 வயதுக்கு உள்பட்ட பெண்களில் சுமார் 49% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 5 பெண்களில் மூவர் பாதிக்கப்படும் வாய்ப்பில் உள்ளனர். ரத்த சோகை என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்னை என்று கருதாமல், பெண்களை வாழ்நாள் முழுவதும் பாதிக்கக் கூடிய ஒரு தீவிர பிரச்னை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து நீடிக்கும் பலவீனம், சோர்வு, தினசரி செயல்பாடுகளில் உற்சாகத்தோடு திறம்படப் பணிபுரியும் திறனை காலப்போக்கில் குறைத்துவிடும்.

கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை இருக்குமானால், குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தை பிறப்பதும், பேறுகாலச் சிக்கல்களும் ஏற்படுவதற்கான அதிக இடர்வாய்ப்புகள் உள்ளன.

அதிக மாதவிடாய் ரத்தப் போக்கு உள்ள பெண்கள் அல்லது கர்ப்பிணிகள் மாதம்தோறும் அல்லது ஆண்டுதோறும் என வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது ரத்த சோகை வராமல் தடுக்க அல்லது அதற்கு தீர்வு காண உதவும். பச்சை இலை, காய்கறிகள், டோஃபு, மீன், பருப்பு வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து சமநிலையைப் பேணுவது அவசியம்.

கடுமையான, மிதமான ரத்த சோகை உள்ள பெண்களுக்கு சில நேரங்களில் இரும்புச்சத்து மாத்திரைகள், மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். உணவுக்குப் பின்னர் உடனடியாக தேநீர், காபி குடிப்பதைத் தவிர்ப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வதும் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படும் திறனைக் குறைத்துவிடும். பரிசோதனைகளோடு நிறுத்திவிடாமல், அதன் பிறகு மருத்துவரை குறித்த காலஅளவுகளில் சந்தித்து ஆலோசனை பெறுவதும், பரிந்துரைப்பை பின்பற்றுவதும் முக்கியம். அப்போதுதான் சிகிச்சை முழுமையாகப் பலனளிக்கும்.

இதயநோய் குறித்து..?

கண்களுக்குப் புலப்படாத அடுத்த பெரும் சுமையாக பெண்களுக்கு இதய பிரச்னைகள் உருவெடுத்துள்ளன. இந்தியப் பெண்களும் விதிவிலக்கல்ல. வயது அதிகரிப்பு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் உழைப்பற்ற, உடற்பயிற்சி இல்லாத சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

இந்த அபாயத்துக்கு ஆளாகக் கூடியோரில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட இளவயது நபர்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர். உடற்பருமன், அதிக கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய் ஆகியவற்றோடு தங்கள் வாழ்க்கை முறை, வளர்சிதை மாற்றங்களுக்குப் போதிய முன்னுரிமை அளிக்காத பெண்களின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

ரத்த சோகைக்கும், இதய ஆரோக்கியத்துக்கும் வேறுபாடு, பாதிப்புகளில் இருந்து மீள்வது எப்படி?

ரத்த சோகை, இதய நோய்கள் இரண்டும் வெவ்வேறான மருத்துவப் பாதிப்புநிலைகள் என்றாலும், நாள்பட்ட ரத்த சோகை உள்ள ஒருவருக்கு இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கிறது. இது இதய நோய்களின் அறிகுறிகளை மேலும் மோசமாக்கக் கூடியது. அதனை தொடர்ந்து ஏற்படும் இதய நோயானது இரும்புச் சத்து வளர்சிதை மாற்றத்துக்கு வழிவகுத்து, ஹீமோகுளோபைக் குறைக்கிறது.

ஒரு வாரத்தில் சுமார் 150 நிமிடங்களுக்கு மிதமான உடற்பயிற்சி, விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வது பாதிப்புகளைத் தடுக்க உதவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். உட்கொள்ளும் உப்பின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரின் உயரத்துக்கேற்ப, ஆரோக்கியமான இடுப்பளவைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

பெண்களின் ஆரோக்கியம் என்பது, வளர்சிதை மாற்றச் சமநிலை, வழக்கமான பரிசோதனைகள் ஆகியன மட்டுமல்ல; எந்தெந்த விருப்பத் தேர்வுகளும், முடிவுகளும் நோய்த் தடுப்புக்கு வழிவகுக்கும். இவையெல்லாம் தங்களை அபாயத்துக்கு உள்ளாக்கும். சரியான விழிப்புணர்வுடன் பெண்கள் இருப்பது இன்றியமையாதது. உடல் ஆரோக்கியத்துக்கான சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது பெண்களுக்கு மிக முக்கியமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments