ரசனை: அன்றும் இன்றும்...!
மனித வாழ்க்கையில் ரசனை என்பது மிக முக்கியமான பண்பாகும்.
ஜோதிமணி பாண்டியன்
மனித வாழ்க்கையில் ரசனை என்பது மிக முக்கியமான பண்பாகும். கலை, இலக்கியம், இசை, இயற்கை, பண்பாட்டை ரசிக்கும் திறன் போன்றவை ஒரு மனிதரை உயர்ந்த சிந்தனை கொண்டவராக மாற்றுகிறது.
மக்கள் நாடகங்களை விரும்பி, விடிய விடிய கண்டு ரசித்த காலம் மறைந்துவிட்டது. மக்களின் சிந்தனையையும் பண்பாட்டையும் வளர்க்கும் சிறந்த கலை வடிவமாக நாடகங்கள் இருந்தன. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து நாடகங்களைக் கண்டு மகிழ்ந்தனர். நாடகங்களால் ஒழுக்கம், தேசப் பற்று, மனித நேயம் போன்ற உயரிய கருத்துகள் மக்களிடம் பரப்பப்பட்டன.
Advertisement
Advertisement
அதேபோல், உலக நிகழ்வுகளை அறிய உதவும் சிறந்த தகவல் ஊடகமான செய்தித்தாளை, காலையில் எழுந்தவுடன் படிப்பது பலரின் அன்றாட வழக்கமாக இருந்தது. ஆனால், இன்று செய்தித்தாளை வாசிக்கும் பழக்கமும் கணிசமாகக் குறைந்து வருகிறது. இன்று மக்களின் ரசனை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என்பது பலரது கருத்தாக உள்ளது. இதற்குப் பல முக்கியக் காரணங்கள் உள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சி: கைப்பேசி, சமூக ஊடகங்கள், இணையம், குறும்படக் காணொலிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மக்கள் நீண்ட நேரம் திரையை மட்டுமே பார்க்கின்றனர். இதனால் புத்தகங்கள் படிப்பது, நல்ல திரைப்படங்களைப் பார்ப்பது, இசையைக் கேட்டு ரசிப்பது போன்ற பழக்கங்கள் குறைந்து விட்டன.
மேலும், சட்டவிரோத இணைய வெளியீடுகள் திரையரங்குக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. இதனால் திரைப்படத்துறை பொருளாதார இழப்பைச் சந்தித்து வருவதோடு, பல கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
வாழ்க்கை முறை: இன்று பலர் கருத்தாழமிக்க, நல்ல சிந்தனையை வளர்க்கும் தரமான படைப்புகளைவிட, உடனடி பொழுதுபோக்கையும், உடனடி கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சிகளையும் காணொலிகளையுமே அதிகம் விரும்புகின்றனர். அத்துடன், இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் கல்வி, வேலை, பொருளாதாரச் சுமைகள் காரணமாக, மக்கள் அமைதியாக இருந்து கலை, இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குவதில்லை. எல்லாவற்றையும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது.
குடும்பச் சூழலும் கல்வி முறையும்: சிறுவயதிலிருந்தே நல்ல புத்தக வாசிப்பு, கலை நிகழ்ச்சிகள், பண்பாட்டு விழாக்கள் ஆகியவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தினால், அவர்களின் ரசனை வளரும். ஆனால், இன்று தேர்வு மதிப்பெண்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், கலை, இலக்கியத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைகிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கு பெற்றோர், ஆசிரியர்கள், சமூகத்தின் பங்கு மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்த வேண்டும். இசை, ஓவியம், நடனம், நாடகம் போன்ற கலைகளை ஊக்குவிக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்கும் பழக்கத்தையும், சமூக வலைதளங்களை அளவோடு பயன்படுத்தும் பழக்கத்தையும் உருவாக்க வேண்டும். மக்கள் ரசனை முற்றிலும் அழிந்துவிடவில்லை. நல்ல பண்பாடு, தரமான கல்வி, சிறந்த கலைப் படைப்புகள், விழிப்புணர்வால் மக்களின் ரசனையை மீண்டும் வளர்க்க முடியும். நல்ல ரசனையுள்ள சமுதாயமே நல்ல பண்புகளும் உயர்ந்த சிந்தனைகளும் கொண்டிருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.