மருத்துவர்களுக்கு மரியாதை!
விடுதலைப் போராட்ட வீரராகவும், புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகவும் விளங்கியவர் பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய்.
பொ.ஜெயச்சந்திரன்
விடுதலைப் போராட்ட வீரராகவும், புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகவும் விளங்கியவர் பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய். பீகார் மாநிலம், பாட்னா அருகில் உள்ள பங்கிபோர் என்ற இடத்தில் 1882- ஜூலை 1-இல் பிறந்த இவர், ஏழைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். மருத்துவப் பணிக்காக தன்னையே அர்ப்பணித்தவர்.
தன்னுடைய வீட்டை மருத்துவமனை கட்ட இலவசமாக வழங்கியவர். இவரை கௌரவிக்கும் விதமாக 1991-ஆம் ஆண்டிலிருந்து ஜூலை 1-ஆம் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நாள் குறித்து பல்வேறு சாதனைகள் புரிந்து வரும் மருத்துவர்கள் சிலரிடம் கேட்டோம்.
Advertisement
Advertisement
அபிராமி செல்வகணபதி (குழந்தைகள் நல மருத்துவர், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை- புதுச்சேரி)
நோயின் இருளில் தவிக்கும் மக்களுக்கு நம்பிக்கையின் ஒளியாய் விளங்குபவர்கள் மருத்துவர்கள். மனித சமுதாயத்தின் உண்மையான காவலர்கள்.
பல சவால்கள் இருந்தாலும், அவற்றைத் தாண்டி மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவர்களின் சேவை அளவிட முடியாதது. இரவு, பகல் பாராமல் பணியாற்றுதல், அவசர சிகிச்சைகளை அலுப்பில்லாமல் செய்தல், தொற்று நோய்கள் பரவும் சூழலிலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்தல் போன்றவை மருத்துவர்களின் அன்றாட வாழ்க்கை.
மருத்துவர்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி சேவை செய்கின்றனர். சில நேரங்களில் மருந்துகளைவிட மருத்துவரின் அன்பான வார்த்தைகள் நோயாளிக்கு அதிக ஆறுதலையும், நம்பிக்கையையும் வழங்குகின்றன. நோயாளிகள், பொதுமக்கள் மருத்துவர்களைப் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களை திட்டாமல் இருந்தாலே போதும். நீங்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால் தான் மருத்துவர் தங்களுடைய பணியை செவ்வனே செய்யமுடியும்.
மருத்துவர்களின் ஆயுள், சராசரி வயது மக்களைவிட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக் கழகத்தின் ஆய்வு முடிவு. இதற்கு அதிக மன அழுத்தம், சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாதது போன்ற பல காரணங்கள் உள்ளன. ஆகவே, மருத்துவர்கள் தங்களுடைய உடல் நலத்திலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
மணிமொழி அருள்தாஸ் (அரசு தாய் சேய் நல மருத்துவமனை, பலவான்குடி- சிவகங்கை மாவட்டம்)
காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றுகிறேன். பெண்கள் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியிருக்கிறேன். பெண்கள் மாரத்தான் போட்டி பலவற்றில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறேன். அதுபோல என்னுடைய துறை சார்ந்து படிப்பவர்களுக்கு இலவச ஆலோசனைகளும் வழங்கிவருகிறேன்.
மிகச்சிறந்த மருத்துவர்களைக் கொண்டிருக்கிறது நம் நாடு. உலகளவில் மருத்துவ தேசம் என்று போற்றப்படும் நிலை இங்கு உருவாகியுள்ளது. ஆனால், மருத்துவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல. பல ஆண்டுகள் கடினமாகப் படித்து, மருத்துவ அறிவைப் பெறுகின்றனர். அதன் பின்னரும், அவர்கள் தினமும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.
அனைத்து மருத்துவர்களும், மனித உயிர்களைக் காப்பாற்றும் மகத்தான பணியைச் செய்கின்றனர். அவர்கள் இல்லையெனில் பல நோய்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கும். ஒரு குழந்தையின் சிரிப்பையும், ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், ஒரு சமூகத்தின் நலனையும் பாதுகாக்கும் அன்பின் சிகரங்கள் மருத்துவர்கள்.
மனித வாழ்வில் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான செல்வமாகும். உடல்நலம் குன்றும் போது, மனிதன் தனது இயல்பான வாழ்க்கையை இழக்க நேரிடுகிறது. அத்தகைய தருணங்களில் மனிதர்களுக்கு நம்பிக்கையின் ஒளியாக இருப்பவர்கள் மருத்துவர்கள். மருத்துவர் என்ற சொல் கருணை, அர்ப்பணிப்பு, அறிவு, பொறுப்பு, மனிதநேயம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக விளங்குகிறது. நோயின் வேதனையில் தவிக்கும் மக்களுக்கு மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் தெய்வங்களாக மருத்துவர்கள் போற்றப்படுகின்றனர்.
வித்யாராஜன் (மருத்துவர்-நிர்வாக இயக்குநர், எல்.சி.மருத்துவமனை-கோவை)
நான் இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவின் தலைவர். பெண் குழந்தைகள் உடல், மன பாதுகாப்பு, அடிப்படை வாழ்வியல் போன்ற எண்ணற்ற பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருக்கிறேன். எங்கள் மருத்துவமனையில் நூலகம் அமைத்துள்ளோம். ஊதியத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து சமூகப் பணிக்கு அளித்துவருகிறேன். அது எனக்கு மிகுந்த மனதிருப்தியை அளிக்கிறது.
இன்றைய உலகில் மருத்துவத் துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய நோய்கள் உருவாகுதல், வாழ்க்கை முறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை மருத்துவத்துறைக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. மருத்துவர்கள் நோயாளிகளை சோதனை செய்து மருந்து வழங்குபவர்கள் மட்டுமல்ல.
நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணியில் முழுமனதுடன் தங்களை ஈடுபடுத்துபவர்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களைப் பாராட்டும் வகையில் இத்தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.
உலகின் பல நாடுகளிலும், மருத்துவர்கள் தினம் வெவ்வேறு மாதங்களில் பல்வேறான காரணங்களை முன்வைத்துக் கொண்டாடப்படுகிறது. நம்முடைய நாட்டில் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.