குழந்தைகள், முதியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்யும் கிராமத்து மருத்துவர்!
அம்பாசமுத்திரத்தில் இலவச மருத்துச் சேவை ஆற்றும் மருத்துவர் ஆதி மாரி மருது பற்றி...
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குழந்தைகள், முதியவர்களுக்கு பணம் எதுவும் வாங்காமல் மருத்துவர் ஆதி மாரி மருது என்பவர் இலவச மருத்துவச் சேவையாற்றி வருகிறார்.
நோய் தீர்க்கும் மருத்துவன் குறித்து திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
Advertisement
Advertisement
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)
மருத்துவன் முதலாவதாக நோயாளியைப் பற்றியுள்ள நோயை அதற்கான அறிகுறிகளால் அறிய வேண்டும்; இரண்டாவதாக, அந்த நோய் வந்ததற்கான காரணத்தை உரிய வகையால் ஆராய்ந்து அறிய வேண்டும், அதன்பிறகு, அந்த நோயைப் போக்குவதற்கான வழியை அறிய வேண்டும். அதன்பிறகு அந்த வழியில் தவறு ஏதும் நேராமல் உரிய மருத்துவத்தைச் செய்ய வேண்டும்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நால் கூற்றே மருந்து (950)
மருத்துவம் என்பது, நோயாளி, மருத்துவன், மருந்து, நோயாளியின் உடன் இருந்து உதவுவோன் ஆகிய நான்கு பிரிவுகளை உடையது ஆகும்.
ஆகிய இரண்டு குறள்கள் மூலம் திருவள்ளுவர் மருத்துவர் குறித்தும் மருத்துவம் செய்ய வேண்டிய முறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார்.
இன்றைய காலத்தில் மருத்துவம் என்பது சேவைப் பணி என்பது மாறி பெரு வியாபாரமாக மாறிவிட்டது. சிறு மருத்துவமனைகளில் இருந்து பெரு மருத்துமனைகள் வரை நோயாளிகளை மிகவும் ஏமாளிகளாக்கி அவர்களிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சுவது போன்று பணத்தையும் உறிஞ்சும் வேலையே நடைபெற்று வருகிறது.
மருத்துவத் துறையில் உள்ள ஊழல்களை பல திரைப்படங்கள் மூலமும் பல செய்திகள் மூலமும் வெளிக் கொணர்ந்தாலும் இன்னும் முறைகேடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித நேயத்தோடு முறையான, தேவையான மருத்துவம் மேற்கொள்ளும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பணம் எதுவும் வாங்காது கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறார் ஆதி மாரி மருது என்ற மருத்துவர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள பண்ணைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி – வள்ளியம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகன் ஆதி மாரி மருது. நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்து கிடைத்த சொற்ப வருமானத்தில் இவர்கள் தங்களது மகனை கோ. ராமநாதபுரம் என்ற ஊரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரைப் படிக்க வைத்துள்ளனர்.
படிப்பில் சுட்டியான ஆதி மாரி மருது 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 1,165 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றுள்ளார். ஆதி மாரி மருதுவிற்கு படிப்பின் மீதுள்ள ஆர்வத்தை அறிந்த கோ. ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் அவருக்கு உதவ முன் வந்துள்ளனர்.
தனது தந்தை ராமமூர்த்தி உடல் நலமில்லாமல் படுக்கையில் இருந்த நிலையில் தனது மூத்த சகோதரர்கள் சங்கரபாண்டியன் மற்றும் பால் பாண்டியன் இருவரும் தங்களது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்று இவரைப் பன்னிரெண்டாம் வகுப்பு வரைப் படிக்க வைத்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற அவரது ஆசையை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நிறைவேற்றியுள்ளனர். மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிப்பதிலிருந்து, நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வது, மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என அனைத்து வேலைகளையும் உடனிருந்து செய்து கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.
மருத்துவப் படிப்புப் படிக்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததையடுத்து அங்கு கொண்டு வந்து சேர்த்து படிப்பு முடியும் வரையிலும் தங்களது உதவிகளைத் தொடர்ந்துள்ளனர்.
கல்லூரியில் சேர்ந்த புதிதில் மருத்துவப் பேராசிரியர் ஒருவர் ஆதி மாரி மருதுவின் திறமையை அறிந்து படிப்பு முடியும் வரை படிப்பிற்குத் தேவைப்படும் நூல்களை வாங்குவதற்கு உதவியுள்ளார்.
ஐந்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது பட்ட மேற்படிப்புப் படிப்பதற்கு ஒரு பேராசிரியர் ஊக்கப்படுத்தி நீட் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி உதவியுள்ளார்.
மருத்துவப் பட்டப் படிப்பை முடித்த மருத்துவர் ஆதி மாரி மருதுவிற்கு சிறுவயதிலிருந்தே இருந்து வந்த லட்சியான அனைவருக்கும் இலவசமாகவோ குறைந்தக் கட்டணத்திலோ மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதிப்பாடு உயிர்பெற்றுள்ளது.
எங்கு, எவ்வாறு தமது சேவையைத் தொடங்குவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த போது அவருக்கு நண்பர்களாக இணைந்த அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சுந்தர், சந்த்ரு இருவரும் ஆதி மாரி மருதுவின் லட்சியத்திற்கு உதவ முன்வந்துள்ளனர்.
சேவை செய்வது சொந்த ஊரில் தான் என்றில்லை என்ற எண்ணத்தில் அம்பாசமுத்திரத்தில் 2021ஆம் ஆண்டு தமது இலவச மருத்துவச் சேவையைத் தொடங்கியுள்ளார்.
குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனைக் கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு ரூ. 100 மட்டும் கட்டணம் என்று தமது சேவையைத் தொடங்கி ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
மருத்துவர் ஆதி மாரி மருதுவை நேரில் சந்தித்து அவரைக் குறித்தும் அவரது லட்சியம் குறித்தும் கேட்டறியலாம் என்று நேரில் சந்தித்தோம். அம்பாசமுத்திரம் கரூர் வைஸ்யா வங்கிக்கு எதிரே உள்ள வணிக வளாகத்தின் ஒரு பிரிவில் ஆதிஷ் மருத்துவமனை என்ற பெயரில் தமது மருத்துவச் சேவையை செய்து வருகிறார். அங்கு சென்று பார்த்த போது, பத்துக்குப் பத்து என்ற அளவில் உள்ள அறையில் எளிய வகையில் தமது மருத்துவச் சேவையை செய்து வருவது தெரிந்தது.
சிகிச்சைக்கு நடுவே கிடைக்கும் நேரத்தில் அவரிடம் பேசியபோது, தாம் சிறுவனாக இருக்கும் போது உடல்நிலைப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டால் மருத்துவச் செலவாக ரூ. 250 முதல் ரூ. 300 வரை ஆகும்.
அந்தத் தொகை எங்களுக்கு மிகப்பெரியத் தொகையாகும். அந்தப் பணம் இருந்தால் பல நாள்களுக்கு நல்ல உணவு உண்ண முடியும் என்ற நிலையில் ஒரு முறை மருத்துவச் செலவிற்கு இவ்வளவுப் பெரிய தொகை தேவைப்படுகிறதே என்ற கவலை தோன்றியது.
எனது பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் மருத்துவர்களிடம் போனால் செலவாகும் என்று மருந்துக் கடைகளில் ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு மாத்திரை வாங்கி போட்டுக் கொள்வர். இது சரிதானா… சரி என்றால் நம்மைப் போன்ற மிகவும் எளிய நிலையில் உள்ளவர்கள் மருத்துவத்திற்கு எவ்வளவு சிரமத்திற்குள்ளாவார்கள் என்று எண்ணமும் தோன்றியது.
அதோடு, இந்த நிலையை நம்மால் முயன்ற வரை மாற்ற வேண்டும். மருத்துவத்திற்குப் படித்து எளியவர்கள், குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழப்பதிந்தது.
அதன்படியே 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றேன். எனக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் பலரும் எனது மருத்துவக் கனவிற்கு பெருமழையாக இருந்து மகிழ்ச்சியோடு அனைத்து உதவிகளையும் செய்து என்னை மருத்துவராக்கினர் என்றார்.
தொடர்ந்து, இங்கு மருத்துவச் சேவையைத் தொடங்கிய காலத்தில் பெரிய விளம்பரமோ, பெரும் பின்புலமோ இல்லாததால் நோயாளிகள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் மருத்துவத்திற்கு வந்த ஒரு சிலர் எனது மருத்துவம் குறித்து அவர்களுக்குத் தெரிந்தவர்களிடம் கூறி, கூறி இன்று நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது.
என்னிடம் மருத்துவத்திற்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்களுக்குக் கட்டணம் வாங்குவதில்லை. தேவைப்படும் மாத்திரை மற்றும் மருந்தையும் தேவையான அளவிற்கு உரிய விலைக்கே கொடுக்கிறேன். எனவே பலரும் மன மகிழ்வோடு சிகிச்சைப் பெற்று நலம் பெறுகிறார்கள்.
இங்கு இலவச மருத்துவச் சேவையைத் தொடங்கிய பிறகு பெரிய எதிர்ப்பு வரவில்லை. என்றாலும், ஒரு சிலர் மறைமுகமாக சேவை செய்வதற்கான தடுப்பு வேலைகளைச் செய்தனர். அவற்றையெல்லாம் நான் துணிந்து எதிர்கொண்டேன். இனியும் தடைகள் வந்தாலும் எதிர்கொள்வேன் என்றார் மன உறுதியோடு.
இப்போது, தம்மிடம் மருத்துவம் பார்த்துச் செல்லும் சிறிய கிராமங்களைச் சேர்ந்த பலரும் அங்கு முறையாக மருத்துவம் பயிலாமல் தவறான வழியில் மருத்துவம் பார்த்து பணம் சம்பாதிப்பவர்களிடம் மருத்துவம் பார்ப்பதை நிறுத்தியுள்ளனர். இதுவே நான் செய்யும் சேவைக்கு சிறந்தப் பரிசாகும்.
இன்று பலமுறை என்னிடம் சிகிச்சை வரும் பெரியவர்கள் பலரும் என்னை உரிமையோடு, மகனே என்றும், பேரப்பிள்ளை என்றும் உறவு கூறி பழகும் அளவிற்கு என்னை நேசிக்கின்றனர். ஒவ்வொரு முறை வரும்போதும், அவர்களது உறவினர்களைப் பார்க்கப் போகும்போது தங்களிடம் இருக்கும் அல்லது தாங்கள் செய்த பலகாரங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதைப் போன்று எனக்கும் கொண்டு வந்து அன்போடு வழங்குகின்றனர். எனக்கு இந்த அன்பே போதுமானது.
எனது தந்தை நான் மருத்துவப் படிப்பில் சேர்ந்து ஆறு மாதங்களில் காலமாகிவிட்டார். நான் படிக்கும் வரை எனது அம்மா நூறு நாள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இப்போது என்னுடன் உள்ளார்.
அப்பா காலமான பிறகு எனது அண்ணன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கட்டடத் தொழிலாளியான அவர் எனது படிப்பிற்கு முடிந்த வரை உதவியுள்ளார். இப்போது, நான் அவரது மகளைப் படிக்க வைத்து வருகிறேன்.
சிறுவயதில் என் மனதில் ஊன்றிய விதை எனது குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்கள் உதவியுடன் இன்று மரமாகியுள்ளது. மேலும், என்னிடம் வரும் நோயாளிகள் மூலம் பெருமரமாகும். இதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் எனக்குப் போதும்.
அளவுக்கு மீறிய பணம் மனிதனை மனிதத்திலிருந்து பிறழச் செய்யும். எனவே எனது வாழ்க்கைக்குத் தேவையான பணம் இருந்தால் போதும் என்ற எண்ணம் என்னுள் இருப்பதால் என் வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவச் சேவையைத் தொடருவேன்.
அரசுப் பணி கிடைத்தால் அதன்பின் என்னிடம் வரும் அனைவருக்கும் முழுமையாக இலவச மருத்துவச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன். அதையும் நிறைவேற்றுவேன் என்றார் நம்பிக்கை நிறைந்த குரலோடு.
மேலும் தமது கனவிற்கும் லட்சியத்திற்கும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்து தங்கள் பிள்ளையைப் போன்று பார்த்துப் பார்த்து உதவிகள் செய்த 8ஆம் வகுப்பு ஆசிரியர் நாராயணசாமி, 10ஆம் வகுப்பு ஆசிரியை மகேஸ்வரி, 12ஆம் வகுப்பு ஆசிரியை சங்கீதா ஆகியோரையும் மருத்துவக் கல்லூரியில் உதவிய மருத்துவப் பேராசிரியர்கள் சுதா (உடலியல் துறை), ஆனந்தி (குழந்தைகள் மருத்துவம்), அதிகம் அறிமுகமில்லாத நிலையில் எனது லட்சியத்தை அறிந்து அதை நிறைவேற்ற நண்பர்களாகக் கிடைத்த சுந்தர், சந்த்ரு ஆகியோரை மிகவும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்.
Aadhi Mari Maruthu, a village doctor who provides free medical care to children and the elderly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.