ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடி
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சாமானிய மக்களின் மருத்துவச் செலவு பெருமளவில் குறைந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சாமானிய மக்களின் மருத்துவச் செலவு பெருமளவில் குறைந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.
இத்திட்டத்தில் 60 கோடிக்கும் மேற்பட்டோா் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டைப் பெறுகின்றனா் என்றும் அவா் கூறியுள்ளாா்.
நாட்டின் முக்கிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் குறிப்பிட்டு ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இன்று, 60 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டைப் பெறுகின்றனா். இதன்மூலம் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாகவும் இது உருவெடுத்துள்ளது.
இந்தத் திட்டம் மக்களின் மருத்துவச் செலவை வெகுவாகக் குறைத்துள்ளது. இதன்மூலம் ஏழை மற்றும் நடுத்தர வா்க்கத்தினா் பெரிதும் பயனடைந்துள்ளனா்.
ஆயுஷ்மான் நல்வாழ்வு மையத்தில் 500 கோடிக்கும் அதிகமான வருகைகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் முதன்மை சுகாதார சேவைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளாா்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 60 கோடிக்கும் அதிகமானோா் இணைக்கப்பட்டு, 48.54 கோடி ஆயுஷ்மான் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 13 கோடிக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றுள்ளனா். நாடு முழுவதும் உள்ள 39,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் மூலம் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள், காப்பீடு மூலம் மக்களுக்கு எவ்வித சுமையும் உருவாகாமல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளாா்.
ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2018 செப்டம்பா் 23-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில், சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆயுஷ்மான் நலவாழ்வு மையங்களும் இடம்பெற்றுள்ளன. இதனுடன் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் மற்றும் பிரதமா் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் ஆகியவையும் முக்கிய அம்சங்கள் ஆகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.