30 வயதுக்குப் பின் கருவுறுதல் ஆபத்தா? யாருக்கெல்லாம் சிக்கல் ஏற்படும்?
அதிக ஆபத்துள்ள கர்ப்பத்தில் ஏற்படும் சிக்கல்கள், யாருக்கெல்லாம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது பற்றி....
- சிந்துஜா ஜேன்
கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பின்னரும் தாய்க்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் உடல்ரீதியான பிரச்னைகளுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்போது அது 'அதிக ஆபத்துள்ள கர்ப்பம்' (high-risk pregnancy) என்று கருதப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பதின் வயது மற்றும் தாமதமான வயதில் ஏற்படும் கர்ப்பம், ரத்த சோகையால் ஏற்படும் சிக்கல்கள் (பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப்போக்கு), இதயப் பிரச்னைகள், வலிப்பு நோய் போன்ற உடல்நலப் பாதிப்புகள் கொண்ட பெண்கள் - கர்ப்பமாகும்போது அது அதிக ஆபத்துள்ள கர்ப்பமாக எடுத்துக்கொள்ளப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
"இதுபோன்றவர்கள் கர்ப்ப கால சிக்கல்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் ரத்த சோகைக்கான சிகிச்சையை பதின் வயதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலான தாய்மார்களுக்கு ரத்தசோகை வரும். தொடர்ந்தும் இருக்கக் கூடும். இந்த ரத்த சோகை, பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப்போக்கு, தொற்றுநோய்களைக்கூட ஏற்படுத்தலாம். கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோய் ஆகியவை முக்கிய பிரச்னைகளாக இருக்கின்றன" என்று பொது சுகாதார நிபுணர் டாக்டர் கே. குழந்தைசாமி கூறுகிறார்.
அதிக ஆபத்துள்ள கர்ப்பம் பற்றி விஜயவாடாவில் உள்ள அரசு சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் டி. ஷர்மிளா கூறுகையில்,
"பதின் வயதில் ஏற்படும் கர்ப்பம் ஆபத்தானதுதான். ஏனெனில், அந்த வயதில் பெண்ணின் உடலுக்கே அதிக ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. அவர்களின் எலும்புகள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. இது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தானதாக அமையலாம். அதேபோல 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பங்களில், அசாதாரண செல் பிரிதல் காரணமாக சிலருக்கு கருவில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, இதயப் பிரச்னைகள், வலிப்பு நோய் உள்ள பெண்களும் அதிக ஆபத்துள்ள கர்ப்பம் என்ற பட்டியலில் வருவார்கள். இதுபோன்ற உடல்நலப் பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன் ஒரு நிபுணருடன் ஆலோசித்து தேவையான சிகிச்சைகள் அல்லது மருந்துகள் மூலமாக அதனைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கர்ப்பத்திற்கு தயாராவது சிறந்தது. அதேபோல கர்ப்ப காலத்திலும் தொடர்ச்சியான சிகிச்சை அவசியம். கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள குழந்தையை பாதிக்காதவண்ணம் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான மருந்துகளை நிபுணர்கள் வழங்குவார்கள்" என்றார்.
கருப்பைக்கு வெளியே கர்ப்பம்
'எக்டோபிக் கர்ப்பம்' (Ectopic Pregnancy) எனும் கருப்பைக்கு வெளியே கரு உருவாவது, நஞ்சுக்கொடி (placenta) தாழ்வாக அமைந்திருக்கும் நிலை (நஞ்சுக்கொடி கருப்பையின் அடிப்பகுதியில் இருப்பது அல்லது கருப்பை வாயை லேசாக மறைத்திருப்பது) ஆகியவையும் அதிக ஆபத்துள்ள கர்ப்பமாக கருதப்படுகிறது.
'எக்டோபிக் கர்ப்பம்' நிலை இருந்தால் கண்டிப்பாக அந்த கருவைக் கலைக்கவே மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனெனில் கருப்பைக்கு வெளியே கரு வளர்ந்தால் கருக்குழாய் வெடித்து தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
அதேநேரத்தில் நஞ்சுக்கொடி தாழ்வாக இருந்தால் சில சூழ்நிலைகளில் கருவைக் கலைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தாயின் கருப்பை வாயின் நீளம் குறைவாக இருந்தாலும் கருச்சிதைவுக்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சூழலில் கருப்பை வாயைத் தைக்கும் சிகிச்சை (cervical stitch) தேவைப்படலாம் என்று கூறுகிறார் டாக்டர் ஷர்மிளா.
"கர்ப்ப கால நீரிழிவு நோய் 15 சதவீதத்திற்கும் அதிகமான கர்ப்பிணிகளிடையே காணப்படுகிறது. இதில் கிராமப்புறப் பெண்களும் சம அளவில் பாதிக்கப்படுகின்றனர்" என்று தமிழ்நாடு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் டி. ரமணி தேவி தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "உடல் பருமன், சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு பாதிப்பு இருத்தல் ஆகியவை இதற்குக் காரணங்களாகும். கர்ப்ப காலத்தில் அதிக உடல் எடை அதிகரிப்பு, முந்தைய கர்ப்பங்களில் கர்ப்பகால நீரிழிவு பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி தொடர்பான கோளாறுகள் ஆகியவற்றைக் கொண்ட பெண்களுக்கு, கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்" என்று தெரிவித்தார்.
தமிழில்: எம். முத்துமாரி
High-risk pregnancy: Who is at risk of complications?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.