FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கர்ப்ப காலத்தில் 60% பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை எது தெரியுமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை, சவால்கள் பற்றி...

Updated On : 13 ஜூலை 2026, 1:49 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

- சிந்துஜா ஜேன்

கர்ப்ப காலத்தில் பெண்கள் பலவிதமான சவால்களை எதிர்கொண்டாலும், அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான பிரச்னை அனீமியா எனும் ரத்தசோகைதான். கர்ப்ப காலத்தில் சுமார் 60 சதவீதம் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாகவும் நாட்டில் தாய்மார்களின் இறப்புகளுக்கு மறைமுகக் காரணங்களில் 40 சதவீதம் ரத்தசோகைதான் காரணமாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுபற்றிய கேள்விகளுக்கு தமிழ்நாடு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் டி. ரமணி தேவி பதிலளிக்கிறார்.

Advertisement

Advertisement

கர்ப்ப காலம் குறித்த கேள்விகளும் அவரது பதில்களும்...

கர்ப்ப காலத்தில் தாயின் உடலிலும் கருவிலுள்ள குழந்தையிடமும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன?

கருப்பையில் வளர்ந்து வரும் கருவை, உடல் ஏற்றுக்கொள்ளவும் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் தாயின் உடலில் ரத்த ஓட்டம், சுவாசம், சிறுநீரகம், நாளமில்லாச் சுரப்பிகள், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இந்த உடலியல் மாற்றங்களை உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது உடலில் சரியாகப் பொருந்தவில்லை என்றால் தாய் மற்றும் கருவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் மொத்தம் 8 முதல் 10 கிலோ வரை உடல் எடை அதிகரிப்பது சிறந்தது. முதல் மற்றும் இரண்டாம் பருவங்களில் (trimester) கருவின் வளர்ச்சி மெதுவாக இருக்கும். மூன்றாம் பருவத்தில்தான் கருவின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்; அப்போது அதன் எடை 500 முதல் 1,000 கிராம் வரை அதிகரிக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் கருப்பையில் இல்லையென்றால் அது குழந்தையின் வளர்ச்சி குறைபாட்டிற்கோ அல்லது கருப்பையிலேயே குழந்தை திடீரென இறப்பதற்கோ வழிவகுக்கலாம். எனவே, தாய் - சேய் இருவரின் பாதுகாப்பை உறுதி செய்ய கருத்தரிப்பதற்கு முன்பே தாயின் உடல்நிலையைச் சீராக வைத்திருப்பது அவசியமாகும்.

சில கர்ப்பிணிகளுக்கு, கணிக்கப்பட்ட பிரசவ தேதி (EDD) கடந்தும் பிரசவ வலி வருவதில்லை, எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

அனைத்துப் பெண்களுக்கும் கணக்கீட்டின்படி பிரசவ தேதி அமைவதில்லை. இது மாதவிடாய் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும். மாதவிடாய் சுழற்சி நீண்டதாக இருந்தால் (உதாரணமாக, 40-50 நாள்களுக்கு ஒருமுறை), பிரசவ தேதி 10 முதல் 20 நாள்கள் வரை தள்ளிப் போகலாம்.

எனவே, 12-13 வாரங்களில் செய்யப்படும் ஆரம்பக்கட்ட ஸ்கேன் பரிசோதனையின்படி திருத்தப்பட்ட பிரசவ தேதியைக் கணக்கிட்டு அதைப் பின்பற்ற வேண்டும். பொதுவாக, கணிக்கப்பட்ட தேதியைத் தாண்டி பிரசவம் தள்ளிப்போகும்போது, ​​மருத்துவர்கள் கருவுக்கான ரத்த ஓட்டம் மற்றும் பனிக்குட நீர் (amniotic fluid) அளவைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவர்கள் பிரசவத்தைத் தூண்டுவதற்கான மருந்துகளை வழங்கலாம். இல்லையெனில், அதிகபட்சமாக 41 வாரங்கள் வரை காத்திருக்கலாம். அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளுக்கு 39 வாரங்கள் முடிந்தவுடனேயே பிரசவத்தைத் தூண்டும் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.

யாருக்கு 'செர்கிலேஜ்' (cerclage) அல்லது கருப்பை வாய் தையல் (cervical stitch) தேவைப்படுகிறது? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பிரசவ தேதிக்கு முன்பாகவே, குறிப்பாக 16 வாரங்களுக்குப் பிறகு கருப்பை வாய் (cervix) திறக்கத் தொடங்கும். எனவே, பெண்களுக்கு பொதுவாகவே கருப்பை வாய் தையல் சிகிச்சை தேவைப்படுகிறது. முன்பு கருச்சிதைவுகள் ஏற்பட்டிருந்தால் இதனைச் செய்வது பாதுகாப்பானது. ஒவ்வொரு 3 மாத கால பரிசோதனைகளின்போது கருப்பை வாயின் நீளத்தை அறிய முடியும். 'அராபின் பெசரி' (Arabin pessary) எனப்படும் கருவியை யோனிப் பகுதியில் கருப்பை வாயைச் சுற்றிப் பொருத்துவதன் மூலம், கருப்பை வாய் திறப்பதைத் தடுக்க முடியும்.

ஏஆர்டி (உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம்) மூலம் கருத்தரித்த பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமா?

ஏஆர்டி மூலம் கருத்தரித்த பெண்கள், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், இவர்களில் பலர் அதிக வயதுடையவர்களாக இருப்பார்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற பிற உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். ஏஆர்டி மூலம் கருத்தரிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகம் என்பதால், அத்தகைய கர்ப்பங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். இத்தகைய பெண்களிடம் ரத்த சோகை, தைராய்டு கோளாறுகள், சிறுநீர்ப் பாதை தொற்று ஆகியவை பொதுவாகக் காணப்படுகின்றன. எனவே, அவர்களுக்கு முறையான மருத்துவக் கண்காணிப்பு அவசியம்.

அனீமியா என்பது கர்ப்பிணிகளுக்கு பொதுவாகக் காணப்படும் ஒரு பிரச்னை. இதை எப்படி எதிர்கொள்வது?

நாட்டில் 60% கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் ஹீமோகுளோபின் உள்ளிட்ட பரிசோதனைகளை பெண்கள் தொடர்ச்சியாக, குறிப்பாக கருத்தரிப்பதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் டி மருந்துகளை கருத்தரிப்பதற்கு முன்னதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரத்த சோகை, தாய் மற்றும் கருவுக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். தாய்மார்களின் இறப்புக்கான மறைமுகக் காரணங்களில் 40% ரத்த சோகையே காரணமாக இருக்கிறது.

தாய், கருவின் அசைவுகளை உணர்வது ஏன் முக்கியம்?

கருவின் ஆரோக்கியத்திற்கு அதன் அசைவுகள் மிக முக்கியமாகும். ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முறையாவது கருவின் அசைவுகள் இருக்க வேண்டும். அதைவிடக் குறைவாக இருந்தால் கண்டிப்பக மருத்துவரை அணுக வேண்டும். கருவின் அசைவுகள் முற்றிலும் இல்லாத நிலையில், அந்தக் குழந்தை 24 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

தமிழில்: எம். முத்துமாரி

summary

The major problem faced by 60 percent of women during pregnancy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments