கர்ப்பம்: சிக்கல்களுக்கு 3 காரணங்கள்! எந்தெந்த வாரங்களில் பரிசோதனை அவசியம்?
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள், தொடர்ச்சியாக செய்ய வேண்டிய பரிசோதனைகள் பற்றி...
- சிந்துஜா ஜேன்
கருத்தரிப்பதைவிட கர்ப்ப காலத்தில் தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் இதன் மூலமாக தாயின் உடல்நிலை மட்டுமின்றி கருவில் உள்ள குழந்தைக்கு ஏற்படும் சிக்கல்களையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்ய முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கருத்தரித்தல்
Advertisement
Advertisement
நவீன வாழ்க்கைச் சூழலில் கருத்தரித்தல் என்பது சவாலானதாகவே மாறிவிட்டது. தாமதமாக திருமணம், வாழ்க்கை முறையால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களால் கர்ப்பமாவது சிக்கலானதாக மாறியுள்ளது, இதனாலே கருத்தரித்தல் மையங்களும் ஐவிஎஃப் எனும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைகளும் அதிகரித்துவிட்டன.
இந்த நிலையில் சிலர் கர்ப்பமடைந்த பிறகு தொடர்ச்சியான சிகிச்சைகள் மேற்கொள்ளாததால் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.
மத்திய சுகாதார அமைச்சகம், கடந்த மே மாத இறுதியில் வெளியிட்ட தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) அறிக்கையின்படி, நாட்டில் சுமார் 4% பெண்கள், கர்ப்ப காலத்தில் ஒருமுறைகூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சுமார் 35% பெண்கள் குறைந்தபட்சம் நான்கு முறையாவது பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அதனை முழுமையாகச் செய்யவில்லை.
எனினும் 2019 - 2021 ஆண்டு காலகட்டத்தில் பரிசோதனை விகிதம் 58.5% ஆக இருந்த நிலையில் 2023 - 2024 காலகட்டத்தில் 65.2% ஆக சற்று உயர்ந்துள்ளது. பரிசோதனை செய்யும் விகிதம் கிராமப்புறங்களில் 61.4% ஆகவும் நகர்ப்புறப் பெண்களிடையே 75.8% ஆகவும் உள்ளது.
எப்போது தொடங்க வேண்டும்?
காவேரி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நல பிரிவுத் தலைவர் டாக்டர் கே. தென்றல் கூறியதாவது:
கருத்தரிப்பதற்கு முன்னதாகவே, அதற்கு திட்டமிடப்படுவதற்கு முன்பே, மருத்துவருடன் ஒரு ஆலோசனை செய்ய வேண்டும். ஏனெனில் சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதியான பின்னரே பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால், அதற்குள் கருவின் ஆரம்ப கால வளர்ச்சி தொடங்கிவிடுகிறது. சிறுநீர் பரிசோதனையின்போது குறைந்தது 5 வாரங்களாவது ஆகிவிடும்.
எனவே, கருத்தரிப்புக்கு முன்னதாக நீரிழிவு, தைராய்டு குறிப்பாக ஹைப்பர் தைராய்டிசம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளனவா என பரிசோதித்து தேவையான கட்டுப்பாடுகளை மேற்கொண்டு பின்னர் கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும். இது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கர்ப்ப காலத்தில், பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
அதேபோல கர்ப்ப கால பரிசோதனைகளின்போது தாயின் மனநலமும் கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்றார்.
கர்ப்ப காலத்தில் செய்யப்படும் பரிசோதனைகள்!
"கருத்தரித்த பிறகு முதல் பரிசோதனையில் கரு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படுகிறது. தாயின் உயரம், உடல் எடை அதிகரிப்பு, வயிற்றின் சுற்றளவு, ரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்படுவதோடு ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. ரத்த சோகை பற்றி அறிந்துகொள்ள ஹீமோகுளோபின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இவற்றில் வேறுபாடுகள் இருந்தால் அதனைச் சரிசெய்ய மருந்துகள் உள்ளிட்டவை பரிந்துரைக்கப்படுகின்றன.
ஏனெனில் ரத்த சோகை, பிரசவத்திற்கு முந்தைய ரத்தப்போக்கு, நோய்த்தொற்று ஆகிய மூன்றும் தாயின் இறப்பு மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்கு மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கர்ப்ப காலத்தில் தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் இவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, கர்ப்பிணிகள், ஏழாவது மாதம் வரை மாதத்திற்கு ஒரு முறையாவது மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
7-வது மாதம் வரை மாதத்திற்கு ஒரு முறையும், 7 மற்றும் 8-வது மாதங்களில் மாதத்திற்கு இரண்டு முறையும், 9-வது மாதத்தில் வாரந்தோறும் பரிசோதனை செய்வது அவசியம்.
தொடர் பரிசோதனைகள் மூலமாக பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க முடியும். இதன் மூலமாக அதிக ஆபத்து, குறைந்த ஆபத்து என்பதை வகைப்படுத்த உதவும். நஞ்சுக்கொடி (placenta) தொடர்பான குறைபாடுகள் கண்டறியப்பட்டால், ரத்த வங்கி வசதி, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் நிபுணர், அவசரச் சிகிச்சைக்கான வசதிகள் உள்ள மருத்துவமனையில் முன்னேற்பாடுகளுடன் பிரசவம் பரிந்துரைக்கப்படும்.
அல்ட்ராசோனோகிராபி அல்லது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் என்பது பாதுகாப்பான மற்றும் உடலுக்குள் ஊடுருவாத ஒரு இமேஜிங் தொழில்நுட்பமாகும். இது கர்ப்பிணிகள், கரு, நஞ்சுக்கொடி, கருப்பையின் ஆரோக்கியத்தை மதிப்பிட ஒலி அலைகளைப் பயன்படுத்துகிறது. இது கர்ப்பத்தின் ஒவ்வொரு மூன்று மாத கால கட்டத்திலும் (trimester) செய்யப்படுகிறது. இது சிக்கல்களை முன்கூட்டியே கண்டறியவும் தேவையான மருத்துவப் பரிந்துரைகளை வழங்கவும், தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கவும் உதவுகிறது" " என்று டாக்டர் கோபிநாத் கூறுகிறார்.
எந்தெந்த வாரங்களில் என்னென்ன பரிசோதனைகள்?
முதல் ட்ரிமெஸ்ட்டர் (1 - 3 மாதங்கள்)
டேட்டிங் ஸ்கேன் : 6-9 வாரங்களில் செய்ய வேண்டும். கருவின் இதயத்துடிப்பை உறுதி செய்கிறது, கருப்பைக்கு உள்ளே கரு அமைந்துள்ளதை உறுதி செய்யவும் கருப்பைக்கு வெளியே கரு வளர்ந்தால் கண்டறியவும் முடியும், பிரசவத் தேதியை கணிக்க முடியும். அதேபோல எத்தனை கருக்கள் உள்ளன எனவும் கண்டறிய முடியும்.
என்.டி. ஸ்கேன் : 11 முதல் 14 வாரங்களில் எடுக்க வேண்டும். குழந்தையின் கழுத்தின் பின்புறத்தில் உள்ள திரவம் அளவிடப்படுகிறது. இதன் மூலமாக டவுன் சிண்ட்ரோம் (குரோமோசோம் பிரச்னை) போன்ற மோசமான ஆபத்துகளை தெரிந்துகொள்ள முடியும்.
இரண்டாவது ட்ரிமெஸ்ட்டர் (4 - 6 மாதங்கள்)
அனாமலி ஸ்கேன் : 18 முதல் 22 வாரங்களில் செய்ய வேண்டும். குழந்தையின் தலை முதல் கால் வரையிலான மிகவும் விரிவான பரிசோதனை. உள் உறுப்புகள், கை, கால்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பது சோதிக்கப்படுகிறது.
தலை சுற்றளவு, தொடை எலும்பின் நீளம், நஞ்சுக்கொடியின் நிலை, தொப்புள் கொடி, ரத்த நாளங்கள், மூளை, முகம், முதுகெலும்பு, இதய அறைகள், நுரையீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி கண்காணிக்கப்படுகிறது. இது பிறவிக் குறைபாடுகளைக் கண்டறியும் முக்கிய ஸ்கேன் ஆகும்.
கடைசி ட்ரிமெஸ்ட்டர் (7 - 9 மாதங்கள்)
கருவின் வளர்ச்சிக்கான ஸ்கேன் - 28 முதல் 32 வாரங்கள் - குழந்தையின் எடை அதிகரிப்பு, உடல் அசைவு, குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீரின் அளவு, நஞ்சுக்கொடியின் நிலை, நஞ்சுக்கொடியின் முதிர்ச்சி, கருவின் அதிகப்படியான அல்லது குறைந்த வளர்ச்சி ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள செய்யப்படுகிறது.
இதன் மூலமாக இயற்கையான யோனி வழிப் பிரசவம் நிகழுமா அல்லது அறுவைச் சிகிச்சை மூலமாக திட்டமிடப்பட வேண்டுமா என்பதையும் முன்கூட்டியே அறிய முடியும்.
டாப்ளர் ஸ்கேன் : 34 முதல் 38 வாரங்கள் - நஞ்சுக்கொடி மற்றும் தொப்புள்கொடி வழியாக செல்லும் ரத்தம், ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து ஆகியவற்றை மதிப்பிடுகிறது. பிரசவ தேதியையும் கணிக்கிறது.
கருத்தரித்த பிறகு முறையான பரிசோதனைகள் செய்யாததால் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன அல்லது குழந்தை பிறந்தவுடனே குறைபாடுகள் கண்டறியப்படுகிறது. இதனைத் தவிர்க்க மருத்துவரின் அறிவுரைப்படி அந்தந்த வாரங்களில் மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழில்: எம். முத்துமாரி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.